2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஐ.சி.சி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்குபெற உள்ள 20 அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், ஐ.சி.சி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30 ஆம் தேதி வரை மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் நேரடியாக உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன. 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளும், 2022 ஆம் ஆண்டு நவம்பர் 14 தரவரிசை அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளும் என 12 அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
மீதம் உள்ள 8 அணிகள் தகுதி சுற்று வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் அமெரிக்க கண்டத்திலிருந்து கனடா, ஆசிய கண்டத்திலிருந்து நேபாளம், ஓமன், கிழக்கு ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து பப்புவா நியூ கினியா, ஐரோப்பாவிலிருந்து அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து நமீபியா, உகாண்டா ஆகிய நாடுகள் தகுதி சுற்றுகளில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“