உலகக் கோப்பை டி20 போட்டிகளில் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
செவ்வாய்கிழமை செயின்ட் வின்சென்ட்டில் நடந்த சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் சிறப்பாக ஆடி 43 ரன்கள் அடித்தார். அடுத்து களமிறங்கிய இப்ராகிம் 18, அஸ்மத்துல்லா 10 ரன்கள் எடுத்தனர். அடுத்த களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் ரஷீத் கான் 3 சிக்சர்களுடன் 10 பந்துகளில் 19 ரன்கள் விளாசினார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு மழை காரணமாக 19 ஓவர்களில் 114 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வங்கதேச அணியில் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் சிறப்பாக விளையாடி 54 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரஷீத் கான் மற்றும் நவீன் உல் ஹக் பந்துவீச்சை சமாளிக்க முடியாத வங்கதேச அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“