பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 94 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா 904 புள்ளிகளுடன், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடம் பிடித்து வரலாறு படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்துவீசி 94 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசை ரேட்டிங்கில் 904 புள்ளிகளைப் பெற்று முன்னேறினார். இதன் மூலம், ஜஸ்பிரித் பும்ரா, ஐ.சி.சி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா 904 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து புது வரலாறு படைத்துள்ளார். ககிசோ ரபாடா 856 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இதற்கு முன்பு ஐ.சி.சி டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஷ்வின் 2016-ம் ஆண்டு முதலிடம் பிடித்து இருந்தார். 2016-ம் ஆண்டு டிசம்பரில் மும்பையில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டுக்குப் பிறகு அஷ்வின் முதலிடம் பிடித்திருந்தார்.
இதையடுத்து, 8 ஆண்டுகளுகுப் பிறகு, மேலும் ஒரு இந்திய வீரராக பும்ரா டெஸ்ட் தரவரிசையில் 904 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்டில் தனது பார்மைத் தக்க வைத்துக் கொண்டால் பும்ரா புதிய சாதனை படைப்பார்.
நடப்பு பார்டர்-கவாஸ்கர் தொடரில், பும்ரா சிறப்பாக விளையாடி பங்களித்து வருகிறார். 6 இன்னிங்ஸ்களில் 10.90 சராசரியுடன் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக பும்ரா முதல் இடத்தில் உள்ளார்.
இதற்கிடையில், பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 152 ரன்கள் எடுத்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் குறிப்பிடத்தக்க உயர்வை கண்டுள்ளார். அடிலெய்டில் அவர் அடித்த சதத்தைத் தொடர்ந்து இந்த சதம், ஹெட்டை தரவரிசையில் நான்காவது இடத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலையும் முந்தியுள்ளார்.
ஐ.சி.சி பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார். பிரிஸ்பேனில் 101 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதல் 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியாவின் ரிஷப் பண்ட் முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை.
அதேபோல, ஒருநாள் கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென் பேட்டிங் தரவரிசையில் குறிப்பிடத்தக்க உயர்வை கண்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதன் மூலம், 13வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கிளாசெனின் தொடர்ச்சியான அரைசதங்கள் அவரது உயர்வில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
ஐ.சி.சி தரவரிசையில் வீரர்களின் ரேங்க்கில் மாற்றங்கள் இருந்தபோதிலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.