இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் விராட் கோலி. 3 ஃபார்மெட்டிலும் கலக்கி வந்த அவர் டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் களமாடி வருகிறார்.
இந்நிலையில், விராட் கோலி 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இருந்து வெளியேறி இருக்கிறார்.
நேற்று செவ்வாய்கிழமையுடன் 36 வயதை எட்டிய கோலி, 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அந்த ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13.4 சராசரியில் 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
ஆனால், கோலி 2016 மற்றும் 2018 க்கு இடையில் தனது டெஸ்ட் வாழ்க்கையின் சிறந்த இடத்தை பிடித்து இருந்தார். அவர் 2018 ஆம் ஆண்டில் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார். மேலும், 3 பார்மெட்டுகளிலும் முதல் இடத்தைப் பிடித்த முதல் இந்திய வீரர் என்கிற சாதனையையும் அவர் படைத்து அசத்தினார்.
இருப்பினும், நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில் கோலி பெரும் பின்னடைவை சந்தித்தார். 3 போட்டிகள், 6 இன்னிங்ஸ்கள் என இந்த தொடரில் அவர் வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு அரை சதத்துடன் அவரின் சராசரி 15.50 ஆக இருந்தது. அவரது மோசமான பேட்டிங் கோலியின் டெஸ்ட் சராசரி 2019 அக்டோபரில் அதிகபட்சமாக 55.10 ஆக இருந்து இப்போது 48.00 - 47.83 -க்குக் கீழே குறைந்துள்ளது. கடைசியாக அவரது டெஸ்ட் சராசரி 48க்குக் கீழே இருந்தது நவம்பர் 2016 ஆகும்.
தற்போது, ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் கோலி 8 இடங்கள் சரிந்து 22-வது இடத்துக்கும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா தரவரிசையில் 26-வது இடத்துக்கும் சரிந்துள்ளார்கள்.
ஜெய்ஸ்வால், பண்ட், கில் முன்னிலை
இங்கிலாந்தின் ஜோ ரூட் பேட்டிங் தரவரிசையில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறார். அவர் முதலிடத்திலும், கேன் வில்லியம்சன் மற்றும் ஹாரி புரூக் 2வது மற்றும் 3வது இடத்திலும் உள்ளார்கள்.
இந்திய வீரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4-வது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும், சுப்மன் கில் 16-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா ககிசோ ரபாடா முதலிடத்தில் உள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா 3வது இடத்திலும், ஆர் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா 5வது மற்றும் 6வது இடத்திலும் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.