மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 6 ஆவது முறையாக ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார், பரபரப்பான இறுதிப்போட்டிக்கு, அரையிறுதியில் விளையாடிய வீராங்கனைகளுடன் மாற்றம் எதுவும் செய்யாமல் இரு அணிகளும் களமிறங்கின.
இரு அணிகளிலும் விளையாடும் 11 வீராங்கனைகளின் விவரம்
ஆஸ்திரேலியா பெண்கள்: அலிசா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னர், கிரேஸ் ஹாரிஸ், எலிஸ் பெர்ரி, தஹ்லியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம், ஜெஸ் ஜோனாசென், மேகன் ஷட், டார்சி பிரவுன்
தென்னாப்பிரிக்கா பெண்கள்: லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மரிசான் கேப், க்ளோ ட்ரையோன், நாடின் டி க்ளெர்க், சுனே லூஸ் (கேப்டன்), அன்னேக் போஷ், சினாலோ ஜஃப்டா (விக்கெட் கீப்பர்), ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா காக்கா, நோன்குலுலெகோ மலாபா
ஆஸ்திரேலியா பேட்டிங்
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அலிசா மற்றும் பெத் களமிறங்கினர். அலிசா நிதானமாக ஆட, மறுமுனையில் ஆடிய பெத் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். 18 ரன்களில் அலிசா அவுட் ஆக, அடுத்ததாக கார்ட்னர் களமிறங்கினார். பெத் மற்றும் கார்ட்னர் இருவரும் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கி ரன் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி 82 ரன்களில் இருந்தப்போது கார்ட்னர் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய கிரேஸ் மற்றும் லானிங் தலா 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுமுனையில் ஆடிய பெத் சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினார். அடுத்து வந்த் பெர்ரி 7 ரன்களிலும் வேர்ஹெம் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர். அடுத்ததாக தகிளா களமிறங்கி 1 ரன் மட்டும் எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. பெத் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 74 ரன்கள் அடித்திருந்தார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடங்கும். தென்னாப்பிரிக்க தரப்பில் ஷப்னிம் மற்றும் மரிசான் தலா 2 விக்கெட்களையும், மலாபா மற்றும் ட்ரையோன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தென்னாப்பிரிக்கா பேட்டிங்
அடுத்ததாக 157 ரன்கள் என்ற சற்று கடின இலக்குடன் தென்னாப்பிரிக்கா களம் இறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக லாரா மற்றும் டாஸ்மின் களமிறங்கினர். டாஸ்மின் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்தாக களமிறங்கிய மரிசான் 11 ரன்களிலும், சுனே லூஸ் 2 ரன்களிலும் அவுட் ஆகினர். இருப்பினும் மறுமுனையில் ஆடிய லாரா சிறப்பாக விளையாடி ரன் சேர்த்து வந்தார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 54 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அடுத்ததாக களமிறங்கிய ட்ரையான், லாரவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். தென்னாப்பிரிக்கா 100 ரன்களை கடந்த நிலையில், அருமையாக விளையாடி வந்த லாரா 61 ரன்களில் அவுட் ஆனார். அவர் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் விளாசியிருந்தார். அடுத்தாக நாடின் களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே ட்ரையான் அவுட் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு தேவையான ரன் ரேட் அதிகமானது. அடுத்து வந்த போஷ் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து சினோலா களமிறங்கி 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை தழுவியது.
தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஆஸ்திரேலிய தரப்பில் மேகன், கார்ட்னர், டார்சி மற்றும் ஜோனசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த உலகக் கோப்பையிலும் சாம்பியன் ஆனதின் மூலம், ஆஸ்திரேலியா அணி 6 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.