/indian-express-tamil/media/media_files/2025/10/21/icc-womens-2025-10-21-07-03-23.jpg)
இப்போது, மீதமிருக்கும் ஒரே ஒரு 'அணிக்கான இடத்துக்கு' அதாவது நான்காவது அரையிறுதி இடத்திற்காக – இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உச்சகட்டப் போராட்டம் வெடித்துள்ளது.
ஐ.சி.சி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கான கதவுகள் கிட்டத்தட்ட மூடும் தருவாயில் உள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என 3 ஜாம்பவான்கள் தங்களின் இடங்களை முன்பதிவு செய்துவிட்டனர். இப்போது, மீதமிருக்கும் ஒரே ஒரு 'அணிக்கான இடத்துக்கு' அதாவது நான்காவது அரையிறுதி இடத்திற்காக – இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உச்சகட்டப் போராட்டம் வெடித்துள்ளது.
மகளிர் உலகக் கோப்பையில் அனைத்து அணிகளும் தலா 5 போட்டிகளை முடித்த நிலையில், இந்தியாவும் நியூசிலாந்தும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. இது ஒரு நேரடியான மோதல் அல்ல. மாறாக, ரன் ரேட் என்ற மெல்லிய நூலில்தான் இந்தியாவின் நம்பிக்கை தொங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தியா வலுவான +0.52 ரன் ரேட்டுடன், நியூசிலாந்தை விடச் சற்றே முன்னிலையில் உள்ளது. இதுதான் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.
நியூசிலாந்து மைனஸ் -0.24 ரன் ரேட்டில் இருப்பதால், புள்ளிகளில் சமநிலை ஏற்பட்டாலும், இந்தியா தற்போது சாதகமான நிலையில் உள்ளது.
மகளிர் உலகக் கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெற, இந்தியா இன்னும் 2 லீக் ஆட்டங்களைச் சந்திக்க வேண்டும்: ஒன்று நியூசிலாந்துக்கு எதிராகவும், மற்றொன்று வங்கதேசத்துக்கு எதிராகவும் விளையாட உள்ளது. இப்போதைய நிலை, இந்தியாவுக்கு 'செய் அல்லது செத்து மடி' (Do or Die) என்ற நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தனது வரவிருக்கும் இரண்டு போட்டிகளிலும் (நியூசிலாந்து மற்றும் வங்கதேசம்) கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இந்த இரண்டு வெற்றிகள் மட்டுமே எந்தக் குழப்பமும் இல்லாமல், வேறு எவரையும் சார்ந்திருக்காமல் இந்தியாவை அரையிறுதிக்குள் அழைத்துச் செல்லும்.
நியூசிலாந்துடனான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால், அரையிறுதி வாய்ப்பு 90% உறுதி. அதன் பிறகு வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் சறுக்கினாலும், ரன் ரேட் என்ற கவசத்தைக் கொண்டு இந்தியா தப்பித்து, அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை நியூசிலாந்துடன் தோற்று, வங்கதேசத்தை வீழ்த்தும் பட்சத்தில், இந்தியாவின் தலைவிதி இங்கிலாந்து கைகளுக்குச் சென்றுவிடும். அதாவது, நியூசிலாந்து இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் தோல்வி அடைய வேண்டும். இத்தகைய பிற அணிகளின் முடிவைச் சார்ந்து இருப்பது, ஒரு கிரிக்கெட் அணிக்கு மிகப் பெரிய சவால் ஆகும்.
நேற்று இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால், இன்றைய நிலைமை முற்றிலும் மாறி இருக்கும். அப்போது, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே போதும் என்ற நிம்மதி கிடைத்திருக்கும். ஆனால், அந்த ஒரு தோல்வி இப்போது இந்திய அணியை, 'ஒவ்வொரு போட்டியும் இறுதிப் போட்டி' என்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.
இந்தியா தனது ரன் ரேட் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, எஞ்சிய இரண்டு ஆட்டங்களிலும் விவேகத்துடனும் வீரியத்துடனும் விளையாடினால் மட்டுமே, உலகக்கோப்பையின் நான்காவது சிம்மாசனத்தை வசப்படுத்தி, இறுதி நான்கு அணிகளின் பட்டியலில் இடம் பெற முடியும். ஆட்டம் இன்னும் முடியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us