ஐசிசி மகளிர் உலக டி20 தொடரில், ஆன்டிகுவாவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின. இதில், எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஐசிசி மகளிர் உலக டி20 தொடரின் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. அரையிறுதியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் மோதின. இதில், ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸையும், இங்கிலாந்து இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கோப்பைக்காக மல்லுக்கட்டியன. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை டேனியல் வியாட் 43 ரன்களும், கேப்டன் நைட் 25 ரன்களும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற இங்கிலாந்து 19.4 ஓவரில் 105 ரன்னில் சுருண்டது.
பின்னர் 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகள் ஹீலி (22), மூனே (14) சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் வந்த கார்ட்னெர் 33 ரன்களும், கேப்டன் மெக் லானிங் 28 ரன்களும் அடிக்க 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.