Womens World T20 2018 : மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் 'பி' பிரிவின் முக்கியமான ஆட்டத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில், இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பி பிரிவில் முதலிடம் பிடித்தது.
மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆட்டம் அபாரமாக உள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளை வீழ்த்தியிருந்த இந்திய அணி, நேற்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர் கொண்டது.
கயானாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த மிதாலி ராஜ், காயம் காரணமாக ஆடவில்லை.
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 55 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். கேப்டப் ஹர்மன்ப்ரீத் கவுரும் 27 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். ஆனால், தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதா உள்ளிட்ட மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். இருவரை தவிர, வேறு யாரும் டபுள் டிஜிட்டில் ரன்கள் எடுக்கவில்லை. இருப்பினும், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, இந்திய அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் 119 ரன்களுக்கு 19.4 ஓவரில் ஆட்டமிழந்தது. அனுஜா பாட்டில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் அரையிறுதி போட்டியை உறுதி செய்ததுடன் மட்டுமல்லாமல் 'பி' பிரிவில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.
இதன் மூலம், 'பி' பிரிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அரையிறுதியில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அல்லது இங்கிலாந்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. அரையிறுதிப் போட்டிகள் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.