சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டதன் மூதல் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் அணிகள் தரவரிசையில் 2 இடத்தைப் பிடித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இந்த போட்டி முடிந்ததைத் தொடர்ந்து, ஐசிசி சர்வதேச டெஸ்ட் அணிகள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. முதல் இடம் பெற்ற நியூசிலாந்து அணியைத் தொடர்ந்து, இந்திய அணி 69.9 சதவீத புள்ளிகளையும் மொத்தம் 460 புள்ளிகளையும் பெற்று 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஐசிசி-யின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி தர வரிசையில் நியூஸிலாந்து அணி 70.0 சதவீத புள்ளிகளையும் மொத்தம் 420 புள்ளிகளையும் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி முதல் இடத்துக்கு வர குறைந்த பட்சம் இன்னொரு போட்டியில் வெற்றி பெற வேண்டும். குறைந்தபட்சம் டிரா செய்ய வேண்டும்.
இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு முன்பு இந்திய அணி, டெஸ்ட் அணிகள் தரவரிசையில் 4வது இடத்தில் இருந்தது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது 6வது டெஸ்ட் தொடரில் விளையாடுகிறார்கள். அதில் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர். 1 போட்டியில் டிரா செய்துள்ளனர்.
உலக டெஸ்ட் கிரிக்கெட் அணி தர வரிசையில் இந்தியாவை அடுத்து ஆஸ்திரேலியா அணி 69.2 சதவீத புள்ளிகளுடனும் மொத்தம் 332 புள்ளிகளைப் பெற்று 3வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 67.0 சதவீத புள்ளிகளுடனும் மொத்தம் 442 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24ம் தேதி அஹமதாபாத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெற உள்ளது.