IDream Tiruppur Tamizhans vs Dindigul Dragons, 20th Match Tamil News: 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை 79 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய கோவை கிங்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப்-க்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில், சேலத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் - சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல் அணி 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. திருப்பூர் தமிழன்ஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
டாஸ் வென்ற திண்டுக்கல் பவுலிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதனால், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. மழை காரணமாக இந்தப் போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது.
இரு அணிகளின் ஆடும் லெவன்:
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்
எஸ் ராதாகிருஷ்ணன், துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்), ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், விஜய் சங்கர், பால்சந்தர் அனிருத், ராஜேந்திரன் விவேக், என்எஸ் சதுர்வேத் (கேப்டன்), எஸ் அஜித் ராம், அல்லிராஜ் கருப்புசாமி, பி புவனேஸ்வரன், ஜி பெரியசாமி
திண்டுக்கல் டிராகன்ஸ்
பாபா இந்திரஜித்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), விமல் குமார், சிவம் சிங், பூபதி குமார், சி சரத் குமார், சுபோத் பதி, பி சரவண குமார், எம் மதிவண்ணன், வருண் சக்கரவர்த்தி, ஜி கிஷூர், ஆஷிக் ஸ்ரீனிவாஸ்
திருப்பூர் பேட்டிங்
திருப்பூர் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராதா கிருஷ்ணன் மற்றும் துஷார் ரஹேஜா களமிறங்கினர். ரன் குவிக்க தடுமாறிய ராதா கிருஷ்ணன் 10 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ரஹேஜா 30 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனால் திருப்பூர் அணி 2 விக்கெட் இழப்பு 58 ரன்கள் எடுத்தது. இந்தநிலையில், சாய் கிஷோர் மற்றும் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 111 ஆக இருந்தப்போது சாய் கிஷோர் 45 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய பாலச்சந்தர் 22 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய விவேக் 17 ரன்கள் எடுத்திருந்தப்போது, கடைசி பந்தில் விஜய் சங்கர் ரன் அவுட் ஆனார். விஜய் சங்கர் 27 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதனையடுத்து திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. திண்டுக்கல் தரப்பில் சரவணக்குமார் மற்றும் அவுசிக் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
திண்டுக்கல் பேட்டிங்
திண்டுக்கல் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விமல்குமார் 14 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் களமிறங்கிய சிவம் சிங் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய பூபதி குமார் 14 ரன்களில் வெளியேறினார். 68 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்த்திருந்த நிலையில், சிவம் சிங் உடன் ஆதித்யா கணேஷ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய சிவம் அரை சதம் அடித்தார். மறுமுனையில் ஆடிய ஆதித்யாவும் அரை சதம் விளாசினார்.
இருவரும் கடைசி வரை விக்கெட் கொடுக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். திண்டுக்கல் அணி 18.3 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிவம் 74 ரன்களுடனும், ஆதித்யா 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். திருப்பூர் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil