21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் அடுத்த ஆண்டு (2018) ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் ரஷ்யா தவிர எஞ்சிய 31 அணிகளும் தகுதிச் சுற்று போட்டிகள் மூலமாக உலகக்கோப்பைக்கு தகுதி பெறும்.
இந்த தகுதிச் சுற்றில் ஸ்வீடன் அணியுடனான பிளே ஆஃப் சுற்றின் முதல் லெக் ஆட்டத்தில் இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது. இதனால், சொந்த மைதானத்தில் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் இத்தாலி அணி இரண்டாம் லெக் ஆட்டத்தில் ஸ்வீடனுடன் மோதியது. ஆனால், மிலன் நகரில் நடந்த இப்போட்டி 1-1 என டிரா ஆனதால், உலகக்கோப்பைக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை இத்தாலி இழந்தது. 1958-ஆம் ஆண்டிற்கு பிறகு வரலாற்றில் இரண்டாவது முறையாக, உலகக்கோப்பைக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை இத்தாலி இழந்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த இத்தாலி தேசமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதன்மூலம், தனது கடைசி உலகக்கோப்பையில் ஆடவிருந்த இத்தாலி அணியின் நட்சத்திர கோல் கீப்பரும், கேப்டனுமான கியான்லியூகி பஃப்பனின் இறுதி வாய்ப்பு பறிபோனது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னுடைய கடைசி கால்பந்து போட்டியில், வெற்றிப் பெற்று அணியை உலகக்கோப்பைக்கு கொண்டுச் செல்ல தவறிவிட்டேன். இதனால், நான் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
அவருக்கு மட்டுமல்ல, இத்தாலி அணியின் மிட்ஃபீல்டர் டேனியல் டி ரோஸி, டிஃபன்ஸ் வீரர் ஆண்ட்ரியா பர்சாக்லி, ஜியார்ஜியோ சைலினி ஆகியோருக்கும் இதுதான் கடைசி உலகக்கோப்பையாக இருந்தது. அதன்பின் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில், உலகக்கோப்பைக்கு இத்தாலி தகுதிப் பெறாததால், அவர்கள் அனைவரும் சோகத்துடன் விடை பெற்றுள்ளனர்.
கடந்த 2006-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இத்தாலி அணியின் வெற்றிக்கு இவர்கள் அனைவரும் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.