பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற 33-வது ஒலிம்பிக்கில், மகளிர் 66 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் களமாடியவர் அல்ஜீரியாவின் இமான் கெலிஃப். இந்த பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் தாய்லாந்தின் ஜான்ஜேம் சுவன்னாபெங் வீழ்த்தி இமான் கெலிஃப் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இருப்பினும், ஒலிம்பிக் போட்டிக்கு இடையே இமான் கெலிஃப் பெண் அல்ல, ஆண் என பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், அவர் பாலின சோதனையில் தோல்வி அடைந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டு, பெரும் சர்ச்சையானது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Imane Khelif, who won gold at Paris Olympics, ‘confirmed’ as a man in leaked medical reports
இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமான் கெலிஃப், பெண் இல்லை ஆண் என்று கசிந்துள்ள மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஜாஃபர் ஐட் அவுடியாவால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், கெலிஃபுக்கு பாலியல் வளர்ச்சியை பாதிக்கும் ஒரு நிலை உள்ளது என்றும், இது பெரும்பாலும் தெளிவற்ற பிறப்புறுப்பு மற்றும் இரண்டாம் நிலை ஆண் பண்புகளை கட்டுப்படுத்துகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு உள் விரைகள் மற்றும் எக்ஸ்.ஒய் (XY) குரோமோசோம் மேக்கப் இருப்பதாகவும், இது 5-ஆல்ஃபா ரிடக்டேஸ் குறைபாடு எனப்படும் மரபணு நிலையைக் குறிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2023 இல், பாரிஸில் உள்ள கிரெம்ளின்-பிசெட்ரே மருத்துவமனை மற்றும் அல்ஜியர்ஸில் உள்ள மொஹமட் லாமைன் டெபாகைன் மருத்துவமனை ஆகியவற்றின் மருத்துவ வல்லுநர்கள் இணைந்து தயாரித்த அறிக்கையில், கெலிஃப்பின் உடற்கூறியல், கருப்பை இல்லாதது மற்றும் மைக்ரோபெனிஸ் என விவரிக்கப்பட்டவை ஆகியவை இடம் பெற்றது. இதனால், அறுவைசிகிச்சை திருத்தம் மற்றும் ஹார்மோன் சிகிச்சையையும் பரிந்துரைக்கப்பட்டது. இது கெலிஃப்பின் உடலியல் பண்புகளை அவரது சுய-உணர்ந்த பாலின அடையாளத்துடன் சீரமைக்கும் நோக்கில் செய்யப்பட்டது.
முன்னதாக, கடந்த 2023 இந்தியாவில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பாலின தகுதித் தேர்வில் அல்ஜீரிய வீராங்கனை இமான் கெலிஃப் தோல்வியடைந்தார். இதேபோல், தைவான் வீராங்கனை லின் யூ-டிங்-கும் பாலின சோதனையில் தோல்வி அடைந்தார். அவர்கள் இருவரும் அந்த தொடரில் இருந்து பாதியில் நீக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் பிரிவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
பாரிஸில் தங்கம் வென்ற பிறகு, சர்ச்சைகளுக்கு பதிலளித்த கெலிஃப் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். ஒரு பெண்ணாக தனது அடையாளத்தை உறுதிப்படுத்திய அவர், "நான் ஒரு பெண்ணாக பிறந்தேன், நான் ஒரு பெண்ணாக வாழ்கிறேன், நான் தகுதி பெற்றுள்ளேன்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“