ACC Men's Emerging Asia Cup: India A beat Pakistan A - Manav Suthar Tamil News: இளம் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2023 தொடர் இலங்கை மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் 'பி' பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் இந்தியா ஏ - பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் ஏ 48 ஓவர்களில் 205 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
பாகிஸ்தான் ஏ அணியில் அதிகபட்சமாக காசிம் அக்ரம் 48 ரன் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர் 5 விக்கெட்டுகளையும், மானவ் சுதர் 3 விக்கெட்டுகளையும், ரியான் பராக் மற்றும் நிஷாந்த் சிந்து தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 205 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்க வீரரான சாய் சுதர்சன் சதமடித்து 104 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடியில் இருந்த அபிஷேக் சர்மா 20 ரன்களும், நிகின் ஜோஸ் 53 ரன்களும், கேப்டன் யாஷ் துல் 21 ரன்களும் எடுத்து ஆட்டத்தை 36.4 ஓவர்களிலேயே முடித்தனர். 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
பாக்,. வீரர்களை பதற விட்ட இளம் வீரர்
இந்த ஆட்டத்தில் ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும், அவரை விட அதிகம் கவனம் ஈர்த்தவர் சுழலில் பாகிஸ்தான் வீரர்களை பதற விட்ட மானவ் சுதார். தனது சுழல் மாறுபாடுகளால் மிகவும் ஆபத்தானவராக இருந்த அவருக்கு, இரண்டு விக்கெட்டுகள் அற்புதமான பந்துகளில் வந்தன.
பாகிஸ்தான் வீரரான கம்ரான் குலாம்-க்கு அழகாக சுழன்று சென்ற பந்து அவருக்கு பின்புறம் இருந்த ஸ்டம்பை பதம் பார்த்தது. மேலும் ஹசீபுல்லா கானும் அவரது மாயாஜால சுழலுக்கு பலியாகினார். பந்து அவரது மிடில் ஸ்டம்பை தாக்கியது. இதேபோல், பாகிஸ்தான் ஏ கேப்டன் முகமது ஹரிசையும் மானவ் ஆட்டமிழக்க செய்து அசத்தினார்.
யார் இந்த மானவ் சுதார்?
இளம் சுழற்பந்து வீச்சாளரான மானவ் சுதார் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்காநகரைச் சேர்ந்தவர். துலீப் டிராபிக்கான மத்திய மண்டல அணியில் விளையாடியவர். 6 ரஞ்சி டிராபி போட்டிகளில் 39 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார். அதற்கு முன் அவர் ஏழு வயதுக்குட்பட்ட 25 ஒரு நாள் போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும், பின்னர் சிகே நாயுடு டிராபியில் 37 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். துலீப் டிராபிக்குப் பிறகு, 20 வயதான அவருக்கு இந்தியா ஏ அணியில் இடம் கிடைத்தது.
🚨Performance of Rajasthan's Manav Suthar in 2023 Emerging Asia Cup🚨
🔥10-0-28-2
🔥9-1-31-1
🔥10-0-36-3
🎖️3 Matches, 6 wickets, 3.28 economy.
🌟In 2022/23 Ranji Trophy - 8 Matches, 44 wickets & 267 runs with bat.#AsiaCup #CricketTwitterpic.twitter.com/fjDcVPOFJd— Indian Domestic Cricket Forum - IDCF (@IDCForum) July 19, 2023
"கடந்த உள்நாட்டு தொடரில் நான் சிறப்பாகச் செயல்பட்டதால், அணியில் எனது பெயர் இடம் பிடிக்கும் என எதிர்பார்த்தேன். மத்திய மண்டலத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக நான் இருந்தேன், அது என்னை துலீப் டிராபி மற்றும் இந்தியா ஏ இரண்டிற்கும் போட்டியாளராக ஆக்கியது. இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், மேலும் எனது உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது" என்று கூறினார்.
மானவ் சுதார் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில், அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. "ஐ.பி.எல்-லில் தவறவிட்டது ஒரு சிறிய மனவேதனையாக இருந்தது. ஆனால் இந்த இரண்டு வாய்ப்புகளையும் நான் இப்போது சம்பாதித்துவிட்டதால் அதை மறந்துவிட்டேன். ஆடும் லெவன் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் சிறப்பாக விளையாடுவதை உறுதி செய்வேன்," என்று அவர் கூறினார்.
தனது சுழல் பந்துவீச்சுடன், மானவ் தனது பேட்டிங் திறமையால் தனக்கென பெயரை உருவாக்கி வருகிறார். சமீப காலங்களில், அவர் ராஜஸ்தானுக்கு சில முக்கியமான ஆட்டத்தை விளையாடி இருந்தார். அது அவரை ஆல்ரவுண்டர் வீரராக மேம்படுத்தியுள்ளது. அவர் எதிர்காலத்தில் ஆல்ரவுண்டராகவும் மிரட்டுவார் என எதிர்பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.