இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று(ஆக.14) நடைபெற்றது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கிறிஸ் கெய்ல், லெவிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
வழக்கத்துக்கு மாறாக, தொடக்கத்திலேயே அதிரடியை கையிலெடுத்த கெயில், இந்திய பவுலர்களை பலவீனமாக பவுலர்களாக்கும் அத்தனை சம்பவங்களையும் செய்துக் கொண்டிருந்தார். 41 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய கெயில், கலீல் அஹ்மது ஓவரில் கேட்ச் ஆனார். மறுப்பக்கம் எவின் லெவிஸ் 43 ரன்களில் சாஹல் ஓவரில் கேட்ச்சானார்.
22 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டதால், 35 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
இறுதியில் 35 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ், 7 விக்கெட்களை இழந்து 240 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்களையும், முகமது ஷமி 2 விக்கெட்களையும், சாஹல், ஜடேஜா இருவரும் தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர்.
பின்னர், 241 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் 10 ரன்களில் ரன் அவுட்டாக, தவானுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் கோலி. தவான் 36 ரன்களில் வெளியேற, தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட், ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே அவுட்டானார்.
இதன்பின் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர், மெச்சூர்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி, ஷ்ரேயாஸ் இருவரும் தங்களது அரை சதத்தை பூர்த்தி செய்தனர். 41 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசி 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோச் வீசிய பந்தில் ஷ்ரேயாஸ் வெளியேறினார்.
கேப்டன் விராட் கோலி 30 வது ஓவரில் தனது 43வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் சதம் விளாசிய கோலி, தொடர்ச்சியாக இப்போட்டியிலும் சதம் விளாசினார். இதன் மூலம் 32.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து இந்திய அணி 256 ரன்கள் எடுத்து வென்றது. இதனால், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஸ்வீப் செய்து கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா. கேப்டன் கோலி 99 பந்துகளை சந்தித்து 114 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணி தொடர்ச்சியாக 9 தொடர்களை வென்று அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
King for a reason ????????#TeamIndia take the ODI series 2-0 ???????????????? #WIvIND pic.twitter.com/Wr8tZJO5e1
— BCCI (@BCCI) August 14, 2019
ஷ்ரேயாஸ் ஐயரின் அபார ஆட்டம், இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது. இத்தொடரில், அவர் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால், ஒருநாள் அணியில், நான்காம் நிலை வீரருக்கான பஞ்சத்தில் சிக்கித் தவித்த இந்தியாவுக்கு ஷ்ரேயாஸ் பெரும் நம்பிக்கை அளித்து, அடுத்தடுத்த தொடர்களிலும் தனது வாய்ப்பை உறுதி செய்திருக்கிறார்.
இத்தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம், விராட் கோலி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சேர்த்து 20,000 ரன்களைக் கடந்தார். நேற்று அவர் 114 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒட்டுமொத்தமாக 20502 ரன்களைச் சேர்த்திருக்கிறார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வரும் ஆக.22ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.