Ind tour to SA Tamil News: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம் (26ம் தேதி) முதல் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது. அபாரமாக மட்டையை சுழற்றிய தொடக்க வீரர் கேஎல் ராகுல் சதம் விளாசி 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 2ம் நாள் ஆட்டம் மழையின் குறுக்கீட்டால் தாமதமாகி, நிறுத்திக் கொள்ளப்பட்டது. தற்போது, 3ம் நாள் ஆட்டம் இன்று மதியம் முதல் தொடங்கியுள்ளது.
இது ஒருபுறமிருக்கு, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி தற்போதுவரை அறிவிக்கப்படவில்லை. அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மாவுக்கு இடது கால் தசைபிடிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.
தற்போது பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி பயிற்சி பெற்று வரும் அவர், இன்னும் முழு உடற்தகுதியை அடையவில்லை. ரோகித் சர்மாவின் உடல் தகுதியை பொறுத்தே 15 பேர் கொண்ட இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை ரோகித் சர்மா காயத்திலிருந்து முழுமையாக குணமாகவில்லை என்றால், அவருக்கு பதில் "கே எல் ராகுல்" இந்திய அணியை வழி நடத்த வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள முன்னணி வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஒருநாள் தொடரிலும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
இதேபோல், அண்மையில் நடந்த விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், எம் ஷாருக்கான் மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் தேர்வுக்குழு கூட்டத்தை இம்மாத இறுதி வரை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.