Team India tour to South Africa Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. முன்னதாக, விராட் கோலி தலைமை தாங்கும் டெஸ்ட் அணிக்கு அஜிங்க்யா ரஹானேவுக்குப் பதில் ரோகித் சர்மா துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு இடது தொடையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், டெஸ்ட் அணியில் துணைக்கேப்டன் பதவி தற்போது காலியாக இருக்கிறது.
துணைக்கேப்டனை அறிவிப்பதில் குழப்பம்
“டெஸ்ட் அணியின் துணை-கேப்டன் பதவி குறித்து இப்போது முடிவு செய்யப்படவில்லை,” என்று ஒரு பிசிசிஐ அதிகாரி ஒரு குறிப்பிட்டுள்ள நிலையில், கிரிக்கெட் வாரியம் துணை-கேப்டன்களை பகிரங்கமாக பெயரிடும் பழக்கத்தில் இல்லாத சகாப்தத்திற்கு ஒரு பின்னடைவை வழங்குகிறது என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 1974-75ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நடந்த பெங்களூர் டெஸ்டில், அப்போதைய தேர்வுக் குழு சுனில் கவாஸ்கரிடம் அவர் மன்சூர் அலி கான் பட்டோடியின் துணை வீரராக இருப்பார் என்று தெரிவித்தது. இந்த அறிவிப்பை பிசிசிஐ முன்னரே அறிவிக்காததது களத்தில் குழப்பம் நிகழ வழிவகுத்தது.
துணைக்கேப்டன் பொறுப்பு யாருக்கு?
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் துணைக்கேப்டன் பதவியைப் பொறுத்தவரை, தேர்வாளர்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று ரஹானேவையே திரும்ப துணைக்கேப்டனாக நியமிப்பது. இரண்டாவது கே.எல். ராகுலுக்கு இந்த பதவியை வழங்குவது. ராகுல் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரையே இந்த தொடருக்கான துணைக்கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.எல். ராகுல் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பினார். இந்த தொடரின் கடினமான சூழ்நிலையில் அரை சதம் மற்றும் சதம் அவர் அடித்திருந்தாலும், அவரின் டெஸ்ட் கிரிக்கெட் இடம் இன்னும் உறுதிப்படுத்ததாத ஒன்றாகவே உள்ளது. இதனால், எதிர்வரும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் அவருக்கு பெரும் சவாலாக அமையும்.

அஜிங்க்யா ரஹானேவை பொறுத்தவரை, கேப்டன் கோலியின் நீண்டகால துணை வீரராக இருந்தவர். மேலும் ஒரு ஸ்டாண்ட்-இன் கேப்டனாக மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டவர். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இவரது தலைமையிலான இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றது.

ஆனால், ரஹானே சமீபத்திய டெஸ்ட் தொடரிகளில் சரியான ஃபார்மில் இல்லாமல் இருப்பது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12 டெஸ்ட்களில் அவரின் சராசரி 19.57 ஆக உள்ளது. எனவே, அவரது இடத்திற்கு மாற்றுவீரரை இந்திய நிர்வாகம் தேடி வருகிறது.
“துணை கேப்டன் பதவியில் இருந்து ரஹானே நீக்கப்பட்டது அவருக்கு ஒரு தெளிவான எச்சரிக்கை சமிக்ஞையாகும். இந்தியா தரப்பில் ஒரு மூத்த வீரராக அவர் மேலும் பங்களிக்க வேண்டும், ”என்று பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கடந்த வாரம் நமது நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.
ஷ்ரேயாஸ்க்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படுமா?

நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்டில் அறிமுமான ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது திடமான பார்மில் இருக்கிறார். அவரின் தற்போதைய ஆட்டம் மிடில்-ஆர்டரில் அணிக்கு வலு சேர்க்கிறது. ஒருவேளை அவருக்கு துணைக்கேப்டன் பதவி வழங்கும் பட்சத்தில் அவரை விளையாடும் லெவனில் இருந்து வெளியேற்றுவது கடினம். எனினும் அவரை துணை கேப்டனாக நியமிப்பது குறித்து அணி நிர்வாகம் தான் முடிவு எடுக்கும்.
ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்புவது யார்?
ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மும்பையில் நேற்று நடந்த பயிற்சியின் போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டது. எனவே, அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக பிரியங்க் பஞ்சால் இடம் பெறுவார்” என்று தெரிவித்திருந்தது.
தற்போது பிசிசிஐ மருத்துவக் குழு தற்போது ரோகித் சர்மாவின் காயத்தை மதிப்பிட்டு, அது தொடை வலியா அல்லது தசை கிழிவா என்பதைச் சரிபார்த்து வருவதாகத் தெரிகிறது. அவரது ஸ்கேன் அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து வரும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா உடல்தகுதியுடன் இருப்பாரா? என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த ஆண்டில், இந்திய டெஸ்ட் அணியின் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுள் ஒருவராக ரோகித் சர்மா உருவெடுத்திருக்கிறார். கடந்த 12 மாதங்களில், 11 டெஸ்டில் விளையாடியுள்ள இவர் 906 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்களும் அடங்கும். இவரின் பேட்டிங் சராசரி 47.68 ஆக உள்ளது.
ரோகித் சர்மாவின் தற்போதைய விலகல் அணியில் தொடக்க வீரர்கள் ஜோடியில் மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும், ஷுப்மான் கில் ஷின் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படாததால், இந்தியாவின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ரோகித் சர்மாவுக்கு பதில் பிரியங்க் பஞ்சால் அணியில் இணைந்து இருப்பதால் மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களமிறங்குவாரா என்பதில் கேள்வியெழும்பியுள்ளது.

மயங்க் அகர்வால் இந்த மாத தொடக்கத்தில் வான்கடேயில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் மற்றும் அரைசதம் விளாசி நல்ல ஃபார்மில் உள்ளார். ஆனால், வெளிநாட்டு தொடரிகளில் அவரது ஃபார்மில் இன்னும் தீவிர முன்னேற்றம் தேவை. இதுவரை 9 வெளிநாட்டு டெஸ்டில் விளையாடியுள்ள அவர் 455 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 26.76 ஆக உள்ளது. மறுபுறம், சொந்த மண்ணில் 7 டெஸ்டில் விளையாடி 839 ரன்கள் குவித்துள்ளார். இதில் நான்கு சதங்களும் அடங்கும். அவரது சராசரி 83.90 ஆக உள்ளது.

ரோகித் சர்மாவுக்கு பதில் அணியில் இணைத்துள்ள 30 வயதான குஜராத்தின் தொடக்க ஆட்டக்காரர் பிரியங்க் பஞ்சால், உள்ளூர் கிரிக்கெட்டில் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அவர் தென்னாப்பிரிக்காவில் நடந்த அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் இந்தியா ஏ அணியை வழிநடத்தி இருந்தார்.
இந்த இரு வீரர்களில் யார் ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்புவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 26 முதல் 30 வரை செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் ஜனவரி 3 முதல் 7 வரை ஜோகன்னஸ்பர்க்கிலும், கடைசி போட்டி ஜனவரி 11 முதல் 15 வரை கேப்டவுனிலும் நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“