India vs Afghanistan | Rashid Khan: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்விளையாட உள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் நாளை பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற உள்ளது. இப்போட்டியானது இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
ரஷீத் கான் விலகல்
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் விலகியுள்ளார். முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷீத் கான் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு விளையாடவில்லை. அவர் முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது அதிலிருந்து அவர் மீண்டு வருகிறார். காயம் காரணமாக அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக பிக் பாஷ் லீக் (BBL) தொடரை அவர் தவறவிட்டார். மேலும் அவர் திரும்பும் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையில், இந்த தொடரில் பங்கேற்கும் 19 பேர் கொண்ட அணியில் முதலில் சேர்க்கப்பட்ட ரஷித் கான் விலகல் தொடர்பான ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் சத்ரான் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் இல்லாத நிலையில் இந்த தொடரில் முகமது நபி, கைஸ் அகமது மற்றும் நூர் அகமது ஆகியோர் சுழல் பவுலிங்கை வழிநடத்துவார்.
ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு தகுதியான அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் தேவை. எனவே, இந்த தொடரை அதற்கான முன்னோட்டமாக பார்க்கிறது.
டி20 தொடரைப் பொறுத்தவரை, மொஹாலியில் தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு, ஜனவரி 14ம் தேதியில் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு இரண்டாவது டி20 போட்டி நடக்கிறது. இதன்பின்னர், மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜனவரி 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“