T20 World Cup 2024 | India Vs Afghanistan: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்ற 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் லீக் சுற்றுடன் வீட்டு நடையைக் கட்டின
சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், குரூப் 2-ல் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் வருகிற 29 ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மல்லுக்கட்டும்
இந்த நிலையில், டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று இரவு 8மணிக்கு பார்படோஸில் உள்ள கென்னிங்க்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில், இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடக்கும் கென்னிங்க்ஸ்டன் ஓவல் மைதான பகுதியில் மழை அச்சுறுத்தல் நிலவுகிறது. போட்டியின் போது 10 சதவீதம் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
10 சதவீத மழை வாய்ப்பு என்பதால், அது நிச்சயமாக மழையால் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. அதிகபட்சம் சில நிமிடங்கள் மழைத் தூறல் இருக்கலாம். ஆனால், போட்டி கைவிடப்படும் அளவுக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது. சில நிமிடங்கள் வரை மழை பெய்து போட்டி சிறிது நேரம் தடைப்பட்டாலும், முழுமையாக நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, மழையால் போட்டி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லை.
சூப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் இல்லை. எனவே, ஒருவேளை மழையால் ஒரு போட்டி கைவிடப்பட்டால் இரண்டு அணிகளுக்கும் சூப்பர் 8 குரூப் பிரிவில் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். தற்போது உள்ள சூழ்நிலையில் அப்படி நடந்தால் அது இந்திய அணிக்கே பின்னடைவை ஏற்படுத்தும்.
சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி முதல் பிரிவில் இடத்தில் உள்ளது. இதே பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து விளையாட உள்ளது. அந்தப் போட்டிகளின் போது மழை பெய்யக் கூடும். அப்போதும் போட்டி கைவிடப்பட்டால் இந்திய அணிக்கு 1 புள்ளி மட்டுமே கிடைக்கும். எனவே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெறுவது மிகவும் அவசியமாக இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.