India vs Australia, Ravindra Jadeja Tamil News: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சிஸ் முடிவில் 63.5 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுசாக்னே 49 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டத்தை விளையாட தொடங்கியுள்ளனர். அரைசதம் விளாசிய கேப்டன் ரோகித் மற்றும் அஸ்வின் களத்தில் உள்ளனர்.
பந்து வீசியபோது ஜடேஜா கையில் களிம்பு: திடீரென வெடித்த சர்ச்சை
இந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுசாக்னே மற்றும் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகள் உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா. ஆசிய கோப்பையின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் சுமார் 5 மாத கால இடைவெளியில் தனது சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், நேற்றை ஆட்டத்தின் போது ஜடேஜா விரல்களில் ஏற்பட்ட வலிக்கு களிம்பு தடவியதை சர்ச்சையாக கிளப்பியுள்ளனர். ஜடேஜா தனது இடது ஆள்காட்டி விரலில் ஜெல்லை பயன்படுத்துவதைப் போன்ற காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. அது வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு, அதிகம் பகிரப்பட்டது.
ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், ஜடேஜா முகமது சிராஜின் கையிலிருந்து எதையோ எடுத்து தனது இடது ஆள்காட்டி விரலில் தடவுவதைக் காணலாம். கேப்டன் ரோகித் ஷர்மாவுடன் கலந்துரையாடும் போது, அவர் தனது பந்துவீச்சு விரலில் சிறிது நேரம் தேய்ப்பதை கேமராக்கள் காண்பித்தன. சிராஜ் விரலில் களிம்பை பூச, ஜடேஜா அதை தனது விரல்களில் தேய்த்துக்கொண்டார்.
இந்த வீடியோவைப் பார்த்த சிலர் ஜடேஜா பந்தை சேதப்படுத்த தான் அவர் அவ்வாறு செய்கிறார் என்று சொல்லாமல் சொல்லி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளனர். இது குறித்து ஒரு ட்விட்டர் வாசி முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினிடம், “இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், ஒரு வீரர் பந்து வீச்சாளரிடம் கிரிப்போ கொடுப்பது போலவும், அவர் அதை தனது சுழலும் விரல் முழுவதும் தேய்ப்பது போலவும் தெரிகிறது." என்று கேட்டுள்ளார்.
அதற்கு பெயின் ஒரே வார்த்தையில் "சுவாரஸ்யம்" என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இவ்வாறு குறிப்பிட்டது ஆஸ்திரேலிய ஊடகங்களில் விவாதங்கள் நடத்த வழிவகுத்துள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அவர் தனது சுழலும் விரலில் என்ன வைத்திருக்கிறார்? இதை இதுவரை பார்த்ததில்லை…" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக அணி நிர்வாகத்தில் உள்ள சிலரிடம் கேட்கையில் ஜடேஜா தனது அடிப்பட்ட விரலுக்கு களிம்பு தான் போட்டுக்கொண்டார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் புருவங்களை உயர்த்தினாலும், இது பொதுவான நடைமுறை என்றும், ஐசிசியின் விளையாடும் சூழ்நிலையில் இது அனுமதிக்கப்படுகிறது என்றும் தகவல் அறிந்த சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை போட்டி நடுவர்களுக்கு சந்தேகத்திற்கு இடம் தரவில்லை என்பதும், சில பேட்ஸ்மேன்கள் தங்கள் கைகளை ஈரப்பதமாக வைத்திருக்க ஓவர்களுக்கு இடையில் க்ரிப்பிங் க்ரீமைப் பயன்படுத்துகிறார்கள் என்பதும், அது ஐசிசியால் முழுமையாக அனுமதிக்கப்படுவதும் புரிந்து கொள்ளப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil