News about Murali Vijay, Sanjay Manjrekar in tamil: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சிஸ் முடிவில் 63.5 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுசாக்னே 49 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இன்று நடந்த 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 114 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசினார். அரைசதம் விளாசி அசத்திய ஜடேஜா 66 ரன்களுடனும், அக்சர் 52 படேல் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 144 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
மஞ்ரேக்கரை சாடிய முரளி விஜய்
இந்நிலையில், முன்னாள் இந்திய வீரரான தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய் முன்னாள் இந்திய வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்றைய ஆட்ட நேரத்தின் போது இந்திய பேட்ஸ்மேன்களில் அரை சதங்களை சதங்களாக மாற்றும் விகித பட்டியல் காண்பிக்கப்பட்டது. அப்போது வர்ணனையில் இருந்த சஞ்சய் மஞ்ரேக்கர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி இருந்தார். அந்த பட்டியலில் முரளி விஜய் முதல் இடத்தை பிடித்து இருந்தார். மேலும், அந்தப் பட்டியலில் முகமது அசாருதீன், பாலி உம்ரிகர், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் இடம் பிடித்து இருந்தனர்.
இந்நிலையில், முரளி விஜய் தனது குறிப்பிடும் போது ஆச்சரியத்தை வெளிப்படுத்திய சஞ்சய் மஞ்ரேக்கரை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சில முன்னாள் மும்பை வீரர்கள் தென்னிந்திய வீரர்களை ஒருபோதும் பாராட்ட மாட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
முரளி விஜய் ஜனவரி 30, 2023 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடைசியாக 2018 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் அவர் விளையாடினார். அவர் இதுவரை 61 டெஸ்ட், 17 ஒருநாள் மற்றும் 9 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
61 டெஸ்டில், முரளி விஜய் 38.28 சராசரியில் 3982 ரன்கள் எடுத்துள்ளார். அவரின் அதிகபட்ச ஸ்கோர் 167 ஆக உள்ளது. அவர் 12 சதங்கள் மற்றும் 15 அரை சதங்களை விலகியுள்ளார். 17 ஒருநாள் போட்டிகளில் 339 ரன்களும், 7 டி20 போட்டிகளில் 169 ரன்களும் எடுத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil