ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நாளை வெள்ளிக்கிழமை (நவ.22) முதல் தொடங்கி நடைபெறுகிறது.
இந்த டெஸ்ட் தொடரின் கோப்பையை ஆஸ்திரேலியா கடந்த 2015 ஆம் ஆண்டு தான் வென்றது. அதன் பிறகு, தொடர்ந்து இந்திய அணியே வென்று வருகிறது. இந்தக் காலக் கட்டத்தில் இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் இத்தொடர் அரங்கேறிய நிலையில், அதனையும் இந்தியா தான் வென்றது அசத்தியது.
இம்முறை வேகப்பந்து வீச்சாளரும், இந்திய மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பை வென்ற கேப்டனுமான பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி களமாடுகிறது. அதனால், இந்த தடவை கோப்பையை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்கிற வேட்கையில் உள்ளனர்.
மறுபுறம், இந்திய கேப்டன் ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக முதல் டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. இதன் காரணமாக அவர் இன்னும் ஆஸ்திரேலியா செல்லாத நிலையில், அவர் ஆடும் லெவன் அணியில் இடம்பெறவில்லை என்பது உறுதியாகிவிட்டது. எனவே, அவருக்கு பதிலாக துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா இந்தப் போட்டிக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேப்டன் ரோகித் இல்லாத நிலையில், அவரது இடத்தில் தொடக்க வீரராக கே.எல் ராகுல் களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம். யஷஸ்வி ஜெய்ஸ்வால் வழக்கம் போல் மற்றொரு தொடக்க வீரராக இருப்பார். காயம் காரணமாக 3-ம் இடத்தில் ஆடும் சுப்மன் கில் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் களமிறங்கலாம்.
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொத்தமாக 100 ரன்களைக் கூட எட்ட தடுமாறிய விராட் கோலி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார். நம்பர் 4 இல் களமிறங்கும் அவர் மீது தான் அனைவரின் பார்வையும் இருக்கும். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய துருவ் ஜூரல் சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதீஷ் குமார் ரெட்டி தனது டெஸ்டில் அறிமுகமாகி, 6வது இடத்தில் பேட்டிங் செய்யலாம். அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஒரே சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் களமிறங்குவார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தும் இந்திய அணில் முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரும் லெவன் அணியில் இடம்பிடிக்கவும் வாய்ப்புள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா, முதலாவது டெஸ்ட் - இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல், தேவ்தத் பாடிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.