India vs Australia 2nd T20 Match Live Scorecard: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி-20 போட்டி மஹாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் இன்று இரவு நடக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 208 ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தாலும், பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரிக்கொடுத்து இருந்தனர். இதனால் இந்திய அணி தோற்கும் நிலை ஏற்பட்டது. எனவே, இந்திய அணி பந்துவீச்சு வரிசையை பலப்படுத்தும் என்று எதிர்க்கலாம்.
காயம் காரணமாக முந்தைய ஆட்டத்தில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது முழு உடல்தகுதியை எட்டியுள்ளார் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்து இருந்தார். எனவே அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இருந்து தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
ஆனாலும் அவருக்கு இடைவிடாது வாய்ப்பு வழங்கப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. அவருக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்படுவாரா என்பது போட்டிக்கு முன்பாகத் தான் தெரியும். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, முந்தைய ஆட்டத்தில் பெற்ற வெற்றியால் அந்த அணி உத்வேகத்தில் உள்ளது. மேலும், தொடரை வெல்லும் ஆவலிலும் உள்ளது. கடந்த ஆட்டத்தில் தொடக்க வீரர் கேமரூன் கிரீனும் (61 ரன்), மேத்யூ வேட்டும் (45 ரன்) இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளினர்.
நல்ல ஃபார்மில் உள்ள அவர்கள் 2-வது ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையுடன் காத்திருக்கிறார்கள். அதே சமயம் உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துடன் களம் காணும் இந்திய அணி பதிலடி கொடுக்க ஆயத்தமாகியுள்ளது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
Hello from Nagpur for the 2⃣nd #INDvAUS T20I! 👋#TeamIndia pic.twitter.com/pKaS4T6XzS
— BCCI (@BCCI) September 23, 2022
ஆடுகளம் எப்படி?
நாக்பூர் ஆடுகளம், மொகாலியுடன் ஒப்பிடும் போது சற்று வித்தியாசமானது. இது மெதுவான தன்மை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பந்து வீச்சாளர்கள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங் செய்யவே விரும்பும்.
நேருக்கு நேர்
நாக்பூர் மைதானத்தில் இதுவரை 12 இருபது ஓவர்போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 4 ஆட்டங்களில் ஆடி அவற்றில் 2-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.
இரு அணிகளின் உத்தேச பட்டியல்:
இந்தியா:
லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல் அல்லது அஸ்வின், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ் அல்லது பும்ரா அல்லது தீபக் சாஹர்.
ஆஸ்திரேலியா:
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கேமரூன் கிரீன், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் ஒயிட், மேத்யூ வேட், கம்மின்ஸ், ஹேசில்வுட், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா.
டாஸ் போடுவதில் தாமதம் :
தற்போது மோசமான வானிலை நிலவியதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக 8 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பிஞ்ச், 15 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 31 ரன்களும், மேத்யூ வேட் 20 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 43 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இந்திய அணி 91 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் இருவரும் முதல் ஓவரில் 21 ரன்கள் சேர்த்து அசத்தினர்.
ஆனால் 3-வது ஓவரின் கடைசி பந்தில் ராகுல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அடுத்து வந்த முன்னாள் கேப்டன் விராட்கோலி, 6 பந்துகளில் 11 ரன்களும், ஹர்திக் பாண்டியா 9 ரன்களும் குவித்து வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில். டேனியல் சாம்ஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு விரட்டிய தினேஷ் கார்த்திக் அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். 7.2 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோகித் சர்மா 20 பந்துகளில் தலா 4 பவுண்டரி சிக்சருடன் 46 ரன்களுடனும், 2 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 10 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் தற்போது 1-1 என்ற சமநிலையில் உள்ள நிலையில். 3-வது மற்றும் கடைசி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 25) ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.