India vs Australia, 2nd Test, Ravichandran Ashwin Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இந்திய வீரர் சேட்டேஷ்வர் புஜாராவு தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.
புதிய சாதனையை படைத்த அஸ்வின்!
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆஸ்திரேலிய டாப் ஆடர் வீரர்களில் மார்னஸ் லாபுஷாக்னே 18 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் பூஜ்ஜிய ரன்னிலும் அஸ்வினின் சுழலில் சிக்கி வெளியேறினர். இதன்பிறகு வந்த அலெக்ஸ் கேரி-யின் விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தினார்.
இந்நிலையில், டெல்லி டெஸ்டில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழல் மன்னன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதில் அவர் சொந்த மண்ணில் மற்றும் வெளிநாட்டில் வீழ்த்திய விக்கெட்டுகளும் அடங்கும். இந்த அசத்தல் சாதனை மூலம் அவர் ஒரு அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை கைப்பற்றி வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
எனினும், டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக மொத்தம் 195 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்னேவின் சாதனையை முறியடிக்க அவர் இன்னும் வெகு தொலைவில் உள்ளார். ஷேன் வார்னேவே இந்தப் பட்டியலில் முதலிடத்திலும் இருக்கிறார்.
ஒரு அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் இந்திய வீரர்கள்:
111 - அனில் கும்ப்ளே vs ஆஸ்திரேலியா
100 - ரவிச்சந்திரன் அஸ்வின் vs ஆஸ்திரேலியா *
99 - கபில் தேவ் vs பாகிஸ்தான்
95 - பிஎஸ் சந்திரசேகர் vs இங்கிலாந்து
95 - ஹர்பஜன் சிங் vs ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி 15வது பந்து வீச்சாளர் அஸ்வின் ஆவார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் போத்தம் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 148 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
சாதனை படைத்த அஸ்வின்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் மொத்தமாக 79 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை எடுத்தார். அஸ்வின் தனது ஐந்து விக்கெட்டுகளுடன், இந்திய அணிக்காக சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய புகழ்பெற்ற வீரர் அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்தார்.
மேலும், அஸ்வின், கும்ப்ளேவுடன் இணைந்து சொந்த மண்ணில் 25 ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்கிற பெருமையையும் பெற்றார். சொந்த மண்ணில் அதிக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் இலங்கை அணிக்காக முத்தையா முரளிதரன் 45 ஐந்து விக்கெட்டுகளையும், ரங்கனா ஹேரத் 26 ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil