ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia LIVE Cricket Score, 2nd Test Day 2
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகலிரவு ஆட்டமாக நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் 3 மாற்றங்களாக துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் படிக்கல் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
முதல் நாள் ஆட்டம் - இந்திய அணி பேட்டிங்:
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே. எல் ராகுல் ஜோடி களமாடினர். இந்த ஜோடியில் ஸ்டார்க் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் எல்.பி.டபிள்யூ அவுட் ஆகி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதனால், இந்திய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பிறகு வந்த கில் களத்தில் இருந்த ராகுலுடன் ஜோடி அமைத்தார்.
இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில், 37 ரன்கள் எடுத்த ராகுல் ஸ்டார்க் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதேபோல், 7 ரன் எடுத்த கோலியும் ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுமுனையில், 5 பவுண்டரிகளை விரட்டி 31 ரன்கள் எடுத்த கில் எல்.பி.டபிள்யூ அவுட் ஆகினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia LIVE Cricket Score, 2nd Test:
இதன்பின்னர் களத்திற்குள் வந்த கேப்டன் ரோகித் 3 ரன்னுக்கும், அவருடன் ஜோடி அமைத்த பண்ட் 21 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 111 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி ரன் சேர்க்க தடுமாறி வந்தது. இந்த சூழலில் களத்திற்குள் இருந்த நிதிஷ் ரெட்டி - அஸ்வின் ஜோடி சிறிது நேரம் விக்கெட் சரிவை தடுத்தது.
ஆனாலும், பந்துவீச்சு தாக்குதலில் இருந்து துளியும் பின்வாங்காத ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் 22 ரன்கள் எடுத்த அஸ்வின் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்தடுத்து வந்த ராணா மற்றும் பும்ரா ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பினர். 54 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சரை பறக்கவிட்ட நிதிஷ் ரெட்டி 42 ரன்னில் ஆட்டமிழக்கவே, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இறுதியில், 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணி 180 ரன்கள் எடுத்தது. மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக ஸ்டார்க் 6 விக்கெட்டையும், கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா பேட்டிங்
இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா - நாதன் மெக்ஸ்வீனி களம் இறங்கினர். இதில் கவாஜா 13 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த லபுஸ்சேன் உடன் மெஸ்வீனி ஜோடி அமைத்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை மட்டும் இழந்து 86 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மெக்ஸ்வீனி 38 ரன்னுடனும், லபுஸ்சேன் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா இன்னும் 94 ரன்கள் பின்னிலையில் இருந்தது.
2-ம் நாள் ஆட்டம் - ஆஸ்திரேலியா பேட்டிங்
களத்தில் இருந்த நாதன் மெக்ஸ்வீனி - மார்னஸ் லாபுசாக்னே ஜோடி 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய நிலையில், இந்திய அணி தங்களது பவுலிங் மூலம் வேகத் தாக்குதல் தொடுத்தது. இதன் பலனாக, 6 பவுண்டரியை விரட்டிய மெக்ஸ்வீனி 39 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருடன் ஜோடி அமைத்த லாபுசாக்னே அரைசதம் அடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர் 64 ரன்கள் எடுத்த நிலையில், நிதிஷ் ரெட்டி பவுலிங்கில் ஜெய்ஸ்வால் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
மெக்ஸ்வீனி விக்கெட்டுக்குப் பின் களம் புகுந்த ஸ்மித் 2 ரன்னுக்கு அவுட் ஆகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவருக்குப் பின் வந்த மிட்செல் மார்ஷ் 9 ரன்னில் அஸ்வின் பந்தில் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து, களத்தில் இருந்த டிராவிஸ் ஹெட் உடன் அலெக்ஸ் கேரி ஜோடி அமைத்தார். இந்த ஜோடியில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ஹெட் 111 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
டிராவிஸ் ஹெட் தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, அவருடன் ஜோடி
அமைத்த அலெக்ஸ் கேரி 15 ரன்னுக்கு சிராஜ் வீசிய யார்க்கர் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். இருப்பினும், அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ஹெட் 141 பந்துகளில் 17 பவுண்டரிகள், 4 சிக்சருடன் 140 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில், முதல் இன்னிங்ஸ் முடிவில் 87.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
இதையடுத்து, 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் களமாடிய நிலையில், ராகுல் 7 ரன்னுக்கும், ஜெய்ஸ்வால் 24 ரன்னும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு பவுண்டரியை விரட்டிய கோலி 11 ரன்னுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். கில் 28 ரன்னுக்கும், கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்னுக்கும் அவுட் ஆகினர். இதனால் இந்திய அணி 105 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்க திணறியது.
தொடர்ந்து ரிஷப் பண்ட் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடினர். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் பண்ட் 28 ரன்னுடனும், நிதிஷ்குமார் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி இன்னும் 29 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
இரு அணிகளின் பிளெயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஸ்காட் போலண்ட்.
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே. எல் ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா (விசி), முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா.
மூன்றாம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
இன்று இந்தியாவுக்கு ஒரு சவாலான நாளாக இருக்கப் போகிறது. முதல் ஓவரில் ரிஷப் பண்ட் வெளியேறிவிட்டார். இந்திய அணிக்கு இது மிக மோசமான தொடக்கமாகும். ஆர் அஸ்வின் இப்போது களம் இறங்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.