IND vs AUS 2nd Test Day 1 Live Updates: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் 113 ரன்களுக்கு சுண்டது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கியது. இந்திய வீரர் சேட்டேஷ்வர் புஜாராவு தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.
#SportsClicks || 100வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சேட்டேஷ்வர் புஜாரா!https://t.co/gkgoZMIuaK | #INDvsAUS | #INDvsAUSTest | #DelhiTestMatch | #CheteshwarPujara | @cheteshwar1 📸 @PraveenKhanna | @ExpressImages | @IExpressSports pic.twitter.com/qV4663B9C9
— Indian Express Tamil (@IeTamil) February 17, 2023
முதல் நாள் ஆட்டம்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் 3 பவுண்டரிகளை விரட்டிய வார்னர் 15 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த மார்னஸ் லாபுஷாக்னே 18 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் பூஜ்ஜிய ரன்னிலும் அஸ்வினின் சுழலில் சிக்கி வெளியேறினர். பின்னர் வந்த டிராவிஸ் ஹெட் 12 ரன்னில் அவுட் ஆனார்.
அரைசதம் விளாசி நிதானம் கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 125 பந்துகளில் 12 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 81 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த அலெக்ஸ் கேரி ரன் ஏதும் எடுக்கமால் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதன்பிறகு களத்தில் இருந்த பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் கேப்டன் பாட் கம்மின்சுடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி அணியின் விக்கெட் சரிவை மீட்டெடுத்தது. அவ்வப்போது இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை ஓட விட்டனர். கேப்டன் கம்மின்ஸ் கூடுதலாக 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினார். எனினும் அவர் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனிடையே களத்தில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் அரைசதம் அடித்தார்.
கம்மின்ஸை தொடர்ந்து வந்த வீரர்களான டோட் மர்பி (0), நாதன் லியோன் (10), மேத்யூ குஹ்னேமன் (6) என சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் களத்தில் தனி ஒருவனாக போராடி வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப்-இன் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இறுதியில், முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா - கே.எல் ராகுல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்களை வீசிய நிலையில், முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்னுடனும், கே.எல் ராகுல் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியை விட ஆஸ்திரேலியா 242 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தை தொடங்கி சிறிது நேரம் தாக்குப்பிடித்த தொடக்க ஜோடியை நாதன் லியோன் தனது சுழலில் பிரித்தார். ராகுல் 17 ரன்களில் எல்.பி.டபுள்யூ முறையில் வெளியேறினார். அடுத்ததாக புஜாரா களமிறங்கிய நிலையில், இந்தியா 50 ரன்களைக் கடந்தது. சிறிது நேரத்திலே ரோகித் சர்மா 32 ரன்களில் அவுட் ஆனார். அவரை நாதன் லியோன் போல்டாக்கினார். அடுத்ததாக கோலி களமிறங்கி 1 ரன் சேர்த்த நிலையில், புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் நாதன் லியோன் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். அடுத்ததாக கோலியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸூம் நாதன் லியோன் பந்தில் அவுட் ஆனார். 4 ரன்கள் எடுத்திருந்த அவர் ஹேண்ட்ஸ்கோம்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்ததாக களமிறங்கிய ஜடேஜா- விராட் கோலியுடன் இணைந்து விக்கெட் சரிவை தடுத்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்தநிலையில் 26 ரன்களில் ஜடேஜா அவுட் ஆனார். அவர் மர்பி பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து பரத் களமிறங்கிய சிறிது நேரத்திலே விராட் கோலி அவுட் ஆனார். அரை சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 44 ரன்களில் அறிமுக சுழற்பந்துவீச்சர் குஹ்னேமான் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். ஆனால் பந்து பேட்டிலும், பேடிலும் ஒரே நேரத்தில் பட்ட நிலையிலும், அவுட் கொடுக்கபட்டது.
அடுத்ததாக அக்சர் பட்டேல் களமிறங்கிய நிலையில், 6 ரன்களில் பரத் அவுட் ஆனார். அவர் நாதன் லியோன் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் அஸ்வின் களமிறங்கினார். அக்சர் மற்றும் அஸ்வின் ஜோடி சிறப்பாக விளையாடி விக்கெட் கொடுக்காமல் ரன் சேர்த்து வந்தது. 139 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலையில், ஜோடி சேர்ந்த அக்சரையும் அஸ்வினையும் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் திணறினர். சிறப்பாக விளையாடி அக்சர் அரை சதம் அடித்தார். பின்னர் சற்று அதிரடியாக சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார். இதற்கிடையில் சிறப்பாக விளையாடி வந்த அஸ்வின் 37 ரன்களில் அவுட் ஆனார். அவர் கம்மின்ஸ் பந்தில் ரென்ஷாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய ஷமியை குஹ்னேமேன் 2 ரன்களில் போல்டாக்கினார். சிராஜ் களமிறங்கி 1 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அக்சர் 74 ரன்களுக்கு அவுட் ஆனார். அவர் மர்பி பந்தில் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்தார். அக்சர் 3 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் விளாசினார். இதனையடுத்து இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 83.3 ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணியை விட 1 ரன் பின் தங்கியது.
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஒருமுனையில் ஹெட் அதிரடியாக ஆட, மறுமுனையில் ஆடி வந்த கவாஜா 6 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஜடேஜா பந்தில் ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக லபுஷாக்னே களமிறங்கினார். டிராவிஸ் ஹெட் தனது அதிரடியை தொடர, லபுஷாக்னே அவருக்கு சிறப்பாக கம்பெனி கொடுத்தார். ஆஸ்திரேலியா அணி 62 ரன்கள் எடுத்திருந்தப்போது இன்றைய நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஹெட் 39 ரன்களிலும், லபுஷக்னே 16 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
2வது இன்னிங்ஸில் ஆஸி. 113 ரன்களுக்கு ஆல் அவுட்; எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கே), டோட் மர்பி, நாதன் லியோன், மேத்யூ குஹ்னேமன்
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.