India vs Australia, 2nd Test Tamil News: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. நாக்பூரில் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 9 ஆம் தேதி) முதல் தொடங்கி நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் வருகிற வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 17) முதல் தொடங்குகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று முதல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா பிளேயிங் 11 இழுபறி
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அதே உத்வேகத்துடன் டெல்லியிலும் களமாடும். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இணைத்துள்ளார். அணியில் தொடக்க வீரருக்கான போட்டி ஷுப்மான் கில் கே.எல் ராகுல் இடையே நிலவி வருகிறது. இதே மைதானத்தில் தனது கடைசி போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் இடம் பிடிப்பாரா? என்பது சந்தேகம் தான்.
இதனால், சில முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தள்ளப்பட்டுள்ளனர். அதாவது, ஷுப்மான் கில் அல்லது கேஎல் ராகுல் அல்லது சூர்யகுமார் யாதவ் இதில் யார் களமாடுவார். விக்கெட் கீப்பராக கே.எஸ்.பாரத் தொடர்வாரா? அல்லது இஷான் கிஷான் சேர்க்கப்படுவாரா?. 4வது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?.
மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ்
ஷ்ரேயாஸ் ஐயர் முதுகுவலி பிரச்சினை காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் விலகினார். அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் களம் இறங்கினார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்ட ஸ்ரேயாஸ் தற்போது முழுமையாக குணமடைந்து உடற்தகுதியை எட்டி விட்டதாக கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி சான்றிதழ் அளித்துள்ளது.
ஷுப்மான் - ராகுல் - சூரியகுமார் யாருக்கு வாய்ப்பு?
சூரியகுமார் யாதவ் தனது முதல் போட்டியில் வெற்றி பெறவில்லை. மறுபுறம், கே.எல் ராகுலின் பேட்டிங் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. எனினும், பேட்டிங் திறன்மிகுந்த அவருக்கு மீண்டுவர இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறியிருந்தார். எனவே, ராகுல் 2வது டெஸ்டில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்.
அப்படியென்றால், ஷுப்மான் - சூரியகுமார் ஆகிய இருவரில் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுகிறது. முதல் போட்டியில் 20 பந்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டதாகக் கருதி, சூரியகுமாருக்கு 3வது டெஸ்டில் வாய்ப்பு கொடுக்கப்படலாம். அப்படி நடந்தால் ஷுப்மான் கில் மீண்டும் காத்திருக்கும் நிலை ஏற்படும்.
விக்கெட் கீப்பராக யாருக்கு வாய்ப்பு?
இந்தியாவின் மற்றொரு தெளிவான விருப்பமான கேஎஸ் பாரத் இருக்கிறார். அவர் ரிஷப் பண்ட் மற்றும் விருத்திமான் சாஹாவுக்காக கேமியோ விளையாடி பெஞ்சில் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக செலவிட்டார். ஆனால் இப்போது, அது அவருடைய நேரம் வந்துவிட்டது. முதல் டெஸ்டில் அவர் பெரிதாக ரன்கள் ஏதும் எடுக்கவில்லை என்றாலும், சிறப்பான விக்கெட் கீப்பிங் செய்தார். எனவே, பாரத் தக்கவைக்கப்படும் போது இஷான் ஒரு பேக்அப்பாக மட்டுமே செயல்படுவார்.
குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
சுழற்பந்துவீச்சு வரிசையில் இந்தியா அதே வெற்றிக் கூட்டணியுடன் களமாட விரும்பினால், அணியில் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் களமிறங்குவார்கள். கூடுதலாக, டெல்லி ஆடுகளம் பேட்டிங்கிற்கு உகந்தது. எனவே, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் பந்துவீசும் வாய்ப்பை பெறுவர். இந்தியா டாஸ் இழந்து 2-வது பேட்டிங் செய்யும் பட்சத்தில், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 6 பேட்டர்களுடன் இந்தியா களமிறங்கும். இதனால், குல்தீப் யாதவ் பெஞ்சில் அமர வேண்டியிருக்கும்.
இந்தியா vs ஆஸ்திரேலியா: டெல்லி டெஸ்டில் என்ன எதிர்பார்க்கலாம்?
கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் ஷர்மா தொடர்ந்து தொடக்க வீரர்களாக களமாடுவார்கள். ஆனால், இதுவே கே.எல்.ராகுலுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். ராகுல் மீண்டும் தடுமாறினால், அவர் சுப்மான் கில்லுக்கு ஆதரவாக இரானி கோப்பைக்கு அனுப்பப்படுவார்.
மிடில் ஆர்டரைப் பொறுத்தவரை, சேதேஷ்வர் புஜாரா தனது 100வது டெஸ்டில் விளையாடுகிறார். எனவே, அவர் விராட் கோலியுடன் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார். 5வது இடத்திற்கான விவாதம் நடந்த வண்ணம் இருக்கு நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் அந்த இடத்தில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். தொடர்ந்து கேஎஸ் பாரத் வருவார்.
லோ-மிடில் ஆடரில் வழக்கம் போல் ஜடேஜா, அஷ்வின் மற்றும் அக்சர் ஆகியோர் இடம்பிடிப்பர். ஷமி மற்றும் சிராஜ் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு தாக்குதலை தொடருவார்கள். எனவே, ஷர்துல் தாக்கூர் மீண்டும் பெஞ்சில் நேரத்தை செலவிட வேண்டியிருக்கும்.
இந்திய அணியின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் / சூரியகுமார் யாதவ், கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.