IND vs AUS: சென்னையில் 3வது ஒருநாள் போட்டி; ஆன்லைன் டிக்கெட் எப்போது வாங்கலாம்?
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1,200 ஆகவும், அதிகபட்சம் ரூ.10,000 (சொகுசு பாக்ஸ்) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
India vs Australia Chennai ODI to start on March 13,
Online sale of tickets, lowest price ticket is Rs 1200 Tamil News
IND vs AUS 3rd ODI Chennai, Online tickets Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
Advertisment
பின்னர், இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முதல் (வியாழக்கிழமை, 9ம் தேதி) தொடங்கி நடந்து வருகிறது.
சென்னையில் 3வது ஒருநாள் போட்டி
இந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி, இவ்விரு அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் 17ம் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் 19ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 22-ம் தேதியும் (பிற்பகல் 1.30 மணிக்கு) நடக்கிறது.
ஆன்லைன் டிக்கெட் தேதி அறிவிப்பு
இந்நிலையில், சென்னையில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் வருகிற 13ம் தேதி தொடங்குகிறது. ஆன்லைன் விற்பனை பேடிஎம் மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்கள் மூலம் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ. பழனி அறிவித்துள்ளார்.
டிக்கெட் விலை
போட்டிக்கான டிக்கெட் விலை குறைந்தபட்சமாக ரூ.1,200 ஆகவும், அதிகபட்சமாக ரூ.10,000 (சொகுசு பாக்ஸ்) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.1,500, ரூ.3,000, ரூ.5,000, ரூ.6,000 ஆகிய விலைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள கவுண்ட்டர்களில் நேரடி டிக்கெட் விற்பனை வருகிற 18ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி விற்பனையில் குறைந்தபட்ச விலையிலான ரூ.1,200 (சி, டி, இ, ஸ்டாண்டு கீழ்தளம்) டிக்கெட் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற டிக்கெட்டுகளை ஆன்லைன் வாயிலாகவே வாங்க முடியும்.
கட்டுப்பாடு
இந்த போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களுக்கு வழக்கம் போல் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. கேமரா, லேப்டாப், ஹெல்மெட், பேக், குடை உள்ளிட்ட பொருட்களை ரசிகர்கள் தங்களுடன் ஸ்டேடியத்துக்குள் எடுத்து வர அனுமதி கிடையாது, மேலும் உணவு, குளிர்பானம், பிளாஸ்டிக் பைகள், சிகரெட், புகையிலை பொருட்கள் ஆகியவைகளை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று தான் சர்வதேச ஒருநாள் போட்டி நடந்தது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. தற்போது நீண்ட இடைவெளிக்குப்பின் இங்கு சர்வதேச போட்டி நடைபெறுவதால், போட்டியை நேரில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil