IND Vs AUS 3rd ODI, Chennai Chepauk MA Chidambaram Stadium Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்ததாக, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.
அதன்படி, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சம நிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை புதன்கிழமை (மார்ச் 22ம் தேதி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் அரங்கேறுகிறது.
சேப்பாக்கம் மைதானம் ரெக்கார்ட்
சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் 39 மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் விளையாடப்பட்ட 22 ஒருநாள் போட்டிகளில் 13ல் பங்கேற்றுள்ள இந்தியா 7ல் வெற்றியும், 5ல் தோல்வியும் கண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா, இதுவரை இங்கு விளையாடிய 5 போட்டிகளில் 4ல் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இங்கு அபார சாதனை படைத்துள்ளது.

மகேந்திர சிங் தோனி (401), விராட் கோலி (283), யுவராஜ் சிங் (257), ஜெஃப் மார்ஷ் (246), ஏபி டி வில்லியர்ஸ் (220) ஆகியோர் இங்கு நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களாக உள்ளனர். கோலி, ஷிம்ரோன் ஹெட்மியர் (139), மனோஜ் திவாரி (104), ஷாய் ஹோப் (102) ஆகியோரைத் தவிர, பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இங்கு 100 ஒருநாள் ரன்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை.
இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் இங்கு விளையாடிய 5 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 110 ரன்களை எடுத்து 22 என்ற குறைவான சராசரியை வைத்துள்ளார். மறுபுறம், ஹர்திக் பாண்டியா (83), ரிஷப் பந்த் (71), ஸ்ரேயாஸ் ஐயர் (70) போன்ற வீரர்கள் அரைசதம் எடுத்துள்ளனர்.
எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களாக முகமது ரபீக் (8), அஜித் அகர்கர் (7), மோர்னே மோர்கல் (7), ஹர்பஜன் சிங் (7), சைமன் ஓ’டோனல் (6) போன்ற வீரர்கள் உள்ளனர்.
இந்த மைதானத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இந்திய வீரர்களில் புவனேஷ்வர் குமார் (6), ரவிச்சந்திரன் அஷ்வின் (5), யுஸ்வேந்திர சாஹல் (3) ஆகிய யாரும் நாளை களமாடும் இந்திய ஆடும் லெவனில் இல்லை. புவனேஷ்வர் குமார் மற்றும் அஷ்வின் தற்போதைய அணி ஒருநாள் போட்டியில் பங்கேற்காத நிலையில், சாஹல் பிளேயிங் லெவன் அணியில் இடம் பெறமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (3), சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (2), துணை கேப்டன் பாண்டியா (2) ஆகியோர் இந்த மைதானத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

தற்போதைய அணியில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய வீரர்களைப் பொறுத்தவரை, கிளென் மேக்ஸ்வெல் (39), டேவிட் வார்னர் (25), ஆடம் ஜம்பா (5 & 1/66), டிராவிஸ் ஹெட் (5), மார்கஸ் ஸ்டோனிஸ் (3 & 2/54 ), ஸ்டீவன் ஸ்மித் (1) அனைவரும் 2017ல் இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டியில் விளையாடியவர்கள்.
இந்த மைதானத்தில் இலக்கை துரத்திய அணிகள் 8 முறையும், முதலில் பேட்டிங் செய்த அணிகள் 13 முறையும் வென்றுள்ளன. இங்கு நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் 288 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil