இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இன்று மீண்டும் ஒரு சாதனையை படைத்து தன்னுடைய கிரிகெட் பயணத்தில் புது மகுடன் சூடி உள்ளார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து மிகவும் விரைவாக 12 ஆயிரம் ரன்களை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெற்ற வீரராக தற்போது சாதனை புரிந்துள்ளார். டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்ககாரா, சனத் ஜெயசூர்யா, மஹீலா ஜெயவர்தனே ஆகியோர் இதற்கு முன்பு 12 ஆயிரம் ரன்களை ஒரு நாள் போட்டிகளில் எடுத்துள்ளனர்.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தன்னுடைய 242 ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் விராட் கோலி.
12 ஆயிரம் ரன்களை விரைவாக அடித்த வீரர் என்ற பட்டத்திற்கு இதற்கு முன்பு சொந்தக்காரராக இருந்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின். 300 ஒரு நாள் போட்டிகளில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1989 முதல் 2012 ஆண்டு காலங்களில் 18, 426 ரன்களை பெற்றார் சச்சின். அவருடைய ஒரு நாள் கிரிக்கெட் பயணத்தில் 49 சதங்கள் மற்றும் 96 அரை சதங்களை அடித்திருக்கிறார். விராட் கோலி 2008ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். தன்னுடைய ஒரு நாள் கிரிக்கெட் பயணத்தில் இதுவரை 43 சதங்கள் மற்றும் 59 அரை சதங்களை அடித்திருக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil