மெல்போர்னில் நடந்து வரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைத்தொடர்ந்து 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 346 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
Ind vs Aus 3rd Test Day 3 : பவுலிங்கில் அசத்திய இந்திய அணி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சத்தீஸ்வர் புஜாரா சதம் அடித்தார். இத்தொடரில், புஜாராவின் இரண்டாவது சதம் இதுவாகும்.
319 பந்துகளில் 106 ரன்கள் எடுத்திருந்த புஜாரா, பேட் கம்மின்ஸ் ஓவரில் போல்டாக, 204 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி ஸ்டார்க் ஓவரில் ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கோலி 82 ரன்களில் வெளியேறினார். 82வது ரன்னை அவர் எடுத்த போது, ஒரே ஆண்டில் வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்தார்.
இதைத் தொடர்ந்து, ரஹானே 34 ரன்களும், ரிஷப் பண்ட் 39 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். ரோஹித் ஷர்மா 63 ரன்களுடன் களத்தில் இருந்த போதே, கேப்டன் விராட் கோலி டிக்ளேர் செய்தார். அப்போது இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள், மிக நிதானமாக ஆடினார்கள். நேற்றைய ஆட்ட நேர முடிவில் முழுமையாக 6 ஓவர்கள் விளையாடி, விக்கெட் இழக்காமல் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.
இந்நிலையில், இன்றைய 3 ஆவது நாள் ஆட்டத் தொடக்கத்திலேயே இந்திய அணியின் பந்து வீச்சு ஆஸ்திரேலியா வீரர்களுக்கு கடும் சவாலாக அமைந்தது. அதிலும் பும்ராவின் பவுலிங் இந்திய ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
22 ரன்களை எடுத்த மார்கஸ் ஹாரிசை போல்ட்டாக்கினார் பும்ரா. அடுத்தடுத்து வந்த ஆஸ்திரேலியா வீரர்களான பிஞ்ச், உஸ்மான் காவ்ஜா, ஷான் மார்ஷ் மிட்செல் மார்ஷ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். டிராவிஸ் ஹெட் 20 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத ஆஸ்திரேலியா அணி திக்குமுக்காட தொடங்கியது. இதனால், 66.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணியைவிட ஆஸ்திரேலிய அணி 292 ரன்கள் பின் தங்கி இருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இதில் இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் ஹனுமா விஹாரி 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாராவும், கோலியும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
இதனை தொடர்ந்து, ரகானே ஒரு ரன்னிலும், ரோகித் சர்மா 5 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.ல் 4 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார். தொடர்ந்து வந்த பண்ட், தடுத்து ஆட, மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில், 5 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்து 346 ரன்கள் என்ற இமாலய முன்னிலையில் உள்ளது.