IND vs AUS 3rd Test: Pitch report Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இதைத்தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த தொடர் வெற்றிகள் மூலம் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை மறுநாள் (மார்ச் 1ம் தேதி) நடக்கிறது.
Fun times in the field ft. @imVkohli 🙂 💪#TeamIndia sharpen their catching skills ahead of the 3rd #INDvAUS Test in Indore. 👍 👍@mastercardindia pic.twitter.com/6VtHfBBbLt
— BCCI (@BCCI) February 27, 2023
சிவப்பு மண்… ஆஸி.க்கு சாதகமான இந்தூர் பிட்ச்
இந்நிலையில், இந்தூர் டெஸ்டுக்காக அதிக பவுன்ஸ் கொண்ட சிவப்பு மண் ஆடுகளத்தை மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கம் அமைத்துள்ளது. இது ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது. ஏன்னென்றால், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் போன்ற அதிரடி வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இணைகிறார்கள். ஆடுகளத்தில் 3-வது நாளில் இருந்து திருப்பம் இருந்தாலும், ஆஸ்திரேலியா அணிக்கு தொடரை வெல்ல சிறந்த வாய்ப்பு உள்ளது. ஆனால், இது ரோகித் சர்மாவின் இந்திய அணிக்கு 3வது சீமரை சேர்க்க கட்டாயப்படுத்தும். இந்தியா இதுவரை மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடி வருகிறது. ஆனால் அது இந்தப் போட்டியில் மாறலாம்.
இதுவரை நடந்த போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். மூன்று நாட்களில் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் முடிக்கவும், அவர்கள் மட்டும் 52 விக்கெட்டுகளை வீழ்த்தவும் செய்தனர். ஆனால், இந்தூரில் கதை வேறாக இருக்கும். இங்கு கடைசியாக இந்திய அணி விளையாடிய டெஸ்டில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசத்தை வேகப்பந்து வீச்சாளர்கள் திணறடிக்க, மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இந்தியா டெஸ்டை 3 நாட்களில் முடித்து இருந்தாலும், வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர்.
Mitchell Starc is getting it to reverse in Indore. Great signs for Australia to have him back even if Cam Green, who is also back, might not particularly appreciate the first clip #IndvAus pic.twitter.com/cT2HujCvbg
— Bharat Sundaresan (@beastieboy07) February 27, 2023
இருப்பினும், பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தாமதமாக நடந்ததால், இங்கு அதிக டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஒன்று தெளிவாகிறது. அது என்னவென்றால், நாக்பூர் அல்லது டெல்லி மைதானங்களில் நடந்த போட்டிகளை அல்லாமல் இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் தங்கள் பேட்டிங்கை ரசித்து விளையாடுவார்கள்.
இந்தூர் பிட்ச் எப்படி?
செங்கற்களால் ஆன சிவப்பு மண் ஆரம்பத்திலேயே வேகம் மற்றும் பவுன்ஸ்களுக்கு சாதகமாக இருக்கும். முந்தைய இரண்டு டெஸ்ட் போட்டிகளைப் போலல்லாமல் பேட்ஸ்மேன்கள் ஷாட்களை ஆடவும் இது உதவும். ஆஸ்திரேலியர்கள் பவுன்சி பிட்ச்களில் விளையாடுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், அது அவர்களுக்கு இந்தூரில் நன்றாகவே உதவும். சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 353 என்பது ஆடுகளம் பேட்டிங்கிற்கு எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதைச் சொல்கிறது.
குறிப்பாக ஹோல்கர் ஸ்டேடியம் ஆடுகளத்தை தயார் செய்ய மும்பையில் இருந்து சிவப்பு மண் கொண்டு வரப்பட்டுள்ளது. மும்பையில் நிறைய விளையாடியதால், ஆஸ்திரேலியா அணி என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியும். சிவப்பு மண் நொறுக்கப்பட்ட செங்கற்களால் தயாரிக்கப்படுகிறது. அதன் கடினமான தன்மை காரணமாக, வான்கடே அல்லது பிரபோர்ன் மைதானங்களில் காணப்படுவது போல், ஆடுகளம் நிறைய பவுன்ஸ்களை உருவாக்கும்.
இருப்பினும், போட்டி முன்னேறும் போது, வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாக்கும் கரடுமுரடான தடங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கமாக இருக்கும். குறிப்பாக, ரவிச்சந்திரன் அஷ்வின் அச்சுறுத்தல் குறித்து ஆஸ்திரேலியர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். இந்தியாவின் சிறந்த ஆஃப்-ஸ்பின்னரான அவர் இந்த மைதானத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். ஏற்கனவே அஸ்வினை ஆஸ்திரேலிய வீரர்கள் கண்டு பயந்துபோயிருப்பதால், அவரது சாதனையே அவர்களை நிலைகுலைய வைக்க போதுமானது.
3 வேகங்களை இறக்குமா இந்தியா?
கடைசியாக இந்தியா இங்கு விளையாடிய டெஸ்டின் போது, விராட் கோலி கேப்டனாக இருந்தார். அவர் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை களமிறங்கினார். இதுவரை நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் தலா இரண்டு வேகங்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளன. பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியுள்ளனர், அதே நேரத்தில் இந்தியா முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் விளையாடியது. இந்தூரில் இது மாறலாம்.
வேகம் மற்றும் மேற்பரப்பில் பவுன்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்த, ஜெய்தேவ் உனத்கட் அல்லது உமேஷ் யாதவை இந்தியா தேர்வு செய்யலாம். அப்படியானால், அக்சர் படேல் வெளியே உட்கார வேண்டியிருக்கும்.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பாரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் , ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்
ஆஸ்திரேலிய அணி:
ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மாட் ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குஹ்னேமன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.