News about Indore, Australia and Dharamsala in tamil: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. நாக்பூரில் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 9) முதல் தொடங்கி நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது
மோசமான அவுட்பீல்டு

இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மலைவாசஸ்தலமான இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் மார்ச் 1-ம் தேதி முதல் 5-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த மைதானத்தின் அவுட்பீல்டு விளையாடுவதற்கு உகந்தவாறு இல்லை. புல் இல்லாமல் திட்டுகளாக காணப்படும் அவுட் பீல்டை இன்னும் 16 நாட்களில் தயார்படுத்துவது கடினம். அத்துடன் அடுத்த சில நாட்களில் மழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த போட்டியை தர்மசாலாவில் இருந்து மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது. மேலும், இந்த டெஸ்ட் இந்தூர் அல்லது ராஜ்கோட்டுக்கு மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியது.
தர்மசாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றம்
இந்த நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறும் என்று பிசிசிஐ இன்று உறுதி செய்துள்ளது. முன்பு தெரிவிக்கப்பட்டபடி, பிசிசிஐயின் ஆய்வுக்குப் பிறகு அந்த மைதானம் தயாராக இல்லை என்று கருதப்பட்டதால், அங்கு நடக்கவிருந்த டெஸ்டைத் தர்மசாலாவிலிருந்து மாற்றி இந்தூரில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்பகுதியில் கடுமையான குளிர்காலம் காரணமாக, அவுட்ஃபீல்டில் போதுமான புல் அடர்த்தி இல்லை. மேலும் முழுமையாக வளர சிறிது நேரம் தேவைப்படும்” என்று கூறியுள்ளது.
NEWS – Venue for third Test of the @mastercardindia Australia tour of India for Border-Gavaskar Trophy shifted to Indore from Dharamsala. #INDvAUS
— BCCI (@BCCI) February 13, 2023
More details here – https://t.co/qyx2H6N4vT pic.twitter.com/N3W00ukvYJ
இந்தூர் மைதானத்தில் ஏற்கனவே 2016-ல் நியூசிலாந்து மற்றும் 2019-ல் வங்க தேசம் ஆகிய இரு அணிகளுடன் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகளை நடத்தியது. சமீபத்தில், இந்த மைதானத்தில் தான் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் வருகிற வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 17) முதல் தொடங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil