ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 -வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 622 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 104.5 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி ‘பாலோ–ஆன்’ ஆனது. ஸ்டார்க் 29 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ–ஆன் வழங்கியதால் 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்த போது, மழை மேகம் திரண்டு இருள் சூழ்ந்ததால், போதிய வெளிச்சம் இல்லை என்று கூறி போட்டியை நடுவர் நிறுத்தினார்.
நீண்ட நேரம் மோசமான வானிலையே நீடித்தது. மாலையில் மழை தூரலும் விழுந்ததால் அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. நேற்றைய தினம் (6.1.19) வெறும் 25.2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டது.
இந்த நிலையில், 5 ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு பந்துகள் கூட வீசப்படாமல் 5-ஆம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன்களிலும், மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியாவை வென்று இருந்தது. பெர்த் டெஸ்டில் மட்டும் ஆஸி. வென்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.
/tamil-ie/media/media_files/uploads/2019/01/merina-3-7-300x188.jpg)
72 வருடமாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர்களில் ஆடி வருகிறது. இந்தத் தொடருக்கு முன் நடந்த 11 தொடர்களில் 8 தொடர்களை இழந்து 3 தொடர்களை சமன் செய்து இருந்தது. முதல்முறையாக 72 வருடங்களில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதுவரை ஆஸ்திரேலியா சென்று 11 டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ள இந்திய அணி ஒரு முறை கூட கோப்பையை கையில் ஏந்தியது இல்லை என்ற வரலாற்றை விராட்கோலி மாற்றியமைத்துள்ளார்.ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெயரையும் இந்தியா பெற்றுள்ளது.
பேட்டிங்கில் புஜாரா 3 சதங்களை அடித்து அதகளப்படுத்தியது, பந்துவீச்சில் பும்ரா விக்கெட்டுகளை தகர்த்தெறிந்து ஆஸ்திரேலியா வீரர்களை ஒருகைப் பார்த்தது இந்தியாவின் இந்த வரலாற்றுச் சாதனைக்கு காரணங்களாக பார்க்கப்படுகிறது.