IND vs AUS 4th Test Live Cricket Score Updates: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) கடந்த வியாழக்கிழமை (டிச.26) முதல் பாக்சிங் டே போட்டியாக நடைபெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs AUS 4th Test Day 1, Live Cricket Score Updates
முதல் நாள் ஆட்டம் - ஆஸ்திரேலியா பேட்டிங்
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்களாக சாம் கான்ஸ்டாஸ் மற்றும் ஸ்காட் போலந்து அணியில் இடம்பெற்றனர். இந்திய அணியில் கில்லுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் ஆடும் வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர். அனுபவ வீரரான கவாஜா நிதானமாக ஆட கான்ஸ்டாஸ் அதிரடி காட்டினார். பும்ராவின் பந்துகளை சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே களமிறக்கப்பட்ட அவர், பும்ராவின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை குவித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் பும்ரா பந்தில் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருவர் கூட சிக்ஸர் அடிக்காத நிலையில், கான்ஸ்டாஸ் சிக்ஸரை பறக்கவிட்டு மிரட்டினார். வேகப்பந்துவீச்சை நொறுக்கி அள்ளிய அவர் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்த நிலையில் ஜடேஜாவின் சுழலில் சிக்கி அவுட் ஆனார். இதன் பிறகு களமிறங்கிய வீரர்களும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த ஆஸ்திரேலியா வலுவான நிலையை நோக்கி பயணித்தது.
நீண்ட நாள் கழித்து பார்முக்கு திரும்பிய உஸ்மான் கவாஜா 57 ரன்களிலும், லபுஸ்சான் 72 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். உணவு இடைவேளைக்கு பின்பு பந்துவீச்சில் சிறிது ஆக்ரோஷம் காட்டிய இந்தியா விக்கெட்டுகளை விரைவாக காலி செய்தது. முந்தைய போட்டியின் ஹீரோ டிராவிஸ் ஹெட் இந்த முறை டக் அவுட் ஆகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அடுத்து வந்த வீரர்களில் மிட்செல் மார்ஷ் 4 ரன்னுக்கும் அலேக்ஸ் கேரி 31 ரன்னுக்கும் அவுட் ஆகினர். ஒருபுறம் விக்கெட் கட கடவென சரிந்தாலும், மறுபுறம் ரன்கள் சர சரவென உயர்ந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்டீவ் சுமித் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியா தரப்பில் முதல் 4 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்து அசத்தினர்.
இறுதியில், முதல் நாள் முடிவில் அபார பேட்டிங்கை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா 86 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில்இருந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
2-ம் நாள் ஆட்டம் - ஆஸ்திரேலியா பேட்டிங்
2-நாள் ஆட்டத்தில் களத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் - கம்மின்ஸ் ஜோடியில், 7 பவுண்டரியை விரட்டிய கம்மின்ஸ் 49 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டார்க் 15 ரன்னுக்கு அவுட் ஆனார். இதனிடையே தனி ஆளாக போராடி வந்த ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். அவர் 197 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில், 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 குவித்தது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டையும், ஜடேஜா 3 விக்கெட்டையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
2-ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
இதனைத் தொடர்ந்து,, இந்தியா தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேப்டன் ரோகித் சர்மா ஜோடியில், ரோகித் 3 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த கே.எல் ராகுல் 3 பவுண்டரியை விரட்டி 24 ரன்னுக்கு அவுட் ஆனார்.
இதனையடுத்து, களத்தில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கோலி ஜோடி அணியை விக்கெட் சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து அசத்தினார். இன்றைய ஆட்டம் முடியும் தருவாயில் ஜெய்ஸ்வால் 82 ரன்னில் ரன் அவுட் ஆனார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே கோலி 36 ரன்னிலும், ஆகாஷ் தீப் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதன்பின்னர், ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்த நிலையில், மேலும் விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர். இறுதியில் 2-ம் நாள் முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் பண்ட் 6 ரன்னுடனும், ஜடேஜா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 310 ரன்கள் பின்னிலையில் இருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், போலண்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
3-ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
தொடர்ந்து இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், சில மணி நேரத்திலேயே பண்ட் 28 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஜடேஜாவும் 17 ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்தியா 222 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்தியா பாலோ ஆனை தவிர்க்க வேண்டும் என்றால் 275 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இந்த ஜோடியில் இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இவர்கள் 275 ரன்களை கடக்க உதவி செய்து இந்தியா பாலோ ஆனை தவிர்க்க காரணமாக இருந்தார்கள்.தொடர்ந்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் சுந்தர் 50 ரன்னிலும், அடுத்து வந்த பும்ரா ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிதானமாக ஆடி வந்த நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் இது அவரது முதல் சதமாகும்.
இதையடுத்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் முடிக்கப்பட்டது. இறுதியில் 3ம் நாள் முடிவில் இந்தியா 116 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 358 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் நிதிஷ் குமார் 105 ரன்னுடனும் , சிராஜ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்னிலையில் இருந்தது.
4-வது நாள் ஆட்டம்
4-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி விக்கெட்டாக வெளியேறிய நித்தீஷ்குமார் ரெட்டி, 189 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 115 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சிராஜ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில், கம்மின்ஸ் போலண்ட், லையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதன் மூலம் 105 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் சான் கொன்ஸ்டஸ் 8 ரன்களிலும், கவாஜா 21 ரன்களிலும் ஆட்டமிந்தனர். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய லபுஷேன் ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த முறுமுனையில், ஸ்மித் 13, ஹெட் 1, மீச்செல் மார்ஷ், 0, கோரி 2 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
தொடர்ந்து 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய, கேப்டன் கம்மின்ஸ் லபுஷேனுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடிய நிலையில், அரைசதம் கடந்து அசத்திய லபுஷேன், 139 பந்துகளில் 3 பவுண்டரியுடன், 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டர்க் 5 ரன்களிலும், அரைசதத்தை நெருங்கிய கம்மின்ஸ் 90 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 40 ரன்களும் எடுத்து வெளியேறினார்.
இதன் மூலம் 173 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணிக்கு 10-வது விக்கெட்டுக்கு இணைந்த லையன் – போலண்ட் ஜோடி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. இந்த ஜோடியை வீழ்ந்த இந்திய அணி மேற்கொண்ட முயற்சிக்கு கடைசிவரை பலன் கிடைக்கவில்லை. 4-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. லையன் 54 பந்துகளில் 41 ரன்களும், போலண்ட் 65 பந்துகளில் 10 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு, 110 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
5-வது நாள் ஆட்டம்
இந்நிலையில், பாக்சிங் டே டெஸ்ட்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 340 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆட்டத்தின் கடைசி நாளான இன்று 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இதில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ரோகித் சர்மா 9 ரன்னிலும், கே.எல். ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும் (0 ரன்), கோலி 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ரிஷப் பண்ட் 30 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஜடேஜா 2 ரன், நிதிஷ் குமார் 1 ரன், ஆகாஷ் தீப் 7 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிதானமாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் 84 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் இந்தியா 79.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 155 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 184 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஸ்காட் போலண்ட்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.