Shreyas Iyer Injury Updates, IND vs AUS Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
பின்னர், இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை (பிப்.9ம் தேதி) தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 167.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் உஸ்மான் 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இந்திய அணி, 4ம் நாள் மதிய உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக தொடக்க வீரர் கில் 128 ரன்கள் எடுத்தார். கோலி 88 ரன்களுடனும், பாரத் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ஜடேஜா அவுட் ஆனதும் ஷ்ரேயாஸ் ஏன் வரவில்லை?
இந்த ஆட்டத்தில் இன்று 4ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், களத்தில் இருந்த கோலி - ஜடேஜா ஜோடி சிறப்பாக மட்டையை சுழற்றினர். மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில், கவர் திசையில் பவுண்டரி பறக்க விட முன்யன்ற ஜடேஜா கேட்ச் கொடுத்து 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனால் அவருக்குப் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கே.எஸ் பாரத் களம் புகுந்து கோலியுடன் ஜோடி அமைத்தார்.
இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஏன் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை முதுகுவலியால் அவதிப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்கேன் எடுக்க சென்றதாகவும், அதனால்தான் அவர் பேட்டிங் செய்ய வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள மருத்துவ செய்திக்குறிப்பில், “மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதுகில் வலி இருப்பதாக புகார் செய்தார்?. அவர் ஸ்கேன் எடுக்கச் சென்றுள்ளார், பிசிசிஐ மருத்துவக் குழு அவரைக் கண்காணித்து வருகிறது, ”என்று தெரிவித்துள்ளது
முன்னதாக, டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குத் திரும்புவதற்கு முன்பு முதுகுப் பிரச்சினை காரணமாக நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டை ஷ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.