India vs Australia, Ahmedabad Test pitch Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றன. இதனால், தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை, 9ம் தேதி) தொடங்குகிறது.
முந்தைய போட்டியில் வெற்றியை ருசித்துள்ள ஆஸ்திரேலிய அடுத்த போட்டியையும் வெல்ல உத்வேகத்துடனும் உற்சாகமுடனும் களமாடும். மறுபுறம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னேற இப்போட்டி முக்கியம் வாய்ந்தது என்பதால் இந்திய அணி தீவிரமாக செயல்படும். தவிர, இப்போட்டியை நேரில் காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் வருகை தருகிறார்கள். எனவே, ஆட்டத்தின் தொடக்க நாள் முதலே போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆன்லைனில் டிக்கெட்டுகள் இல்லை; ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் இல்லை என்று ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர். நேற்று ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட்டுகளை வாங்க சில ரசிகர்கள் வந்த நிலையில், அவர்களில் சிலர் ஆன்லைனில் டிக்கெட்டுகளை ‘புக்’ செய்ய இயலவில்லை என்று கூறினர்.
இதுகுறித்து கடந்த வாரத்தில் ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்தனர். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ மவுனம் சாதித்தது. எனினும், பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ டிக்கெட் பார்ட்னரான புக்மைஷோ.காம் (bookmyshow.com) இந்த பிரச்சனை தற்காலிகமானது என்றும், ஐந்து நாட்களுக்கான டிக்கெட்டுகள் விரைவில் கிடைக்கும் என்றும் உறுதியளித்தனர்.
இந்தத் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளும் ‘இரண்டு நாட்கள் மற்றும் ஒரு அமர்வு’ மட்டுமே நீடித்ததால், ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் இருந்ததை பார்க்க முடிந்தது. “இப்போது இரண்டு நாட்களில் விளையாட்டுகள் முடிந்துவிடுகின்றன. எனவே, முதல் நாளை நீங்கள் தவறவிட்டால், ஒரு டெஸ்டைக் காண வருவதன் பயன்என்ன?” என்று டிக்கெட் கவுண்டருக்கு வெளியே ஒரு ரசிகர் கூறினார்.
அகமதாபாத் ஆடுகளம் எப்படி?
இந்த போட்டி நடக்கவிருக்கும் அகமதாபாத் ஆடுகளம் குறித்து குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், “இந்த டெஸ்டில் நாங்கள் ஒரு ஸ்போர்ட்டிங் விக்கெட்டுக்கு செல்லப் போகிறோம். மத்திய சதுக்கத்தில், கருப்பு மற்றும் சிவப்பு (மண்) ஆகிய இரண்டு வகையான பிட்சுகளும் உள்ளன. எந்த மாதிரியான டிராக்கில் டெஸ்ட் விளையாடுவது என்பது விரைவில் முடிவு செய்யப்படும்,” என்று கூறியுள்ளார்.
இந்தூரில் ரேங்க் டர்னரை பயன்படுத்தும் இந்தியாவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்த பிறகு, மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது என்று அறிந்தவர்கள் கூறுகிறார்கள். “நமது பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடாதபோது, நிறைய திரும்பும் ஆடுகளங்களில் விளையாடுவதில் என்ன பயன்?” ஒரு அதிகாரி கூறியுள்ளார்.
அகமதாபாத் ஆடுகளத்தில், மத்திய சதுக்கம் சற்று உயர்த்தப்பட்டுள்ளது. லார்ட்ஸ் மைதானம் போன்ற சரிவு இல்லை. ஆனால் அது ஒரு சீரான 360 டிகிரி சாய்வைக் கொண்டுள்ளது. பந்து சரிவில் ஓடி, கச்சிதமாக அழகுபடுத்தப்பட்ட பில்லியர்ட்ஸ்-டேபிள் மேற்பரப்பில் பறக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பேட்ஸ்மேன்கள் ஷாட்களுக்கான மதிப்பைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த பிட்ச் பற்றி இவ்வளவு சீக்கிரமாகவே கணிப்பு செய்தல் கூடாது. ஆனால், பிட்ச் நிச்சயமாக ஒரு ‘மணல் குழி’ (sand pit)அல்ல. அங்கு தயார் செய்யப்பட்டுள்ள 4 ஆடுகளங்களிலும் ஏராளமான புற்கள் உள்ளன. பல ஆண்டுகளாக, எதிரணிகள் கூட ஆடுகளத்தின் உண்மையான தன்மையை ஆட்டம் தொடங்கும் போது மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் ஒரே இரவில் பச்சை நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறுவதாக அறியப்படுகிறது.
இருப்பினும், மாலையில், புழுதிப் புயல் மைதானத்தைத் தாக்கும் முன், இரவில் லேசான தூறல் மழை இருந்தது. இதனால், தண்ணீரை பீச்சி அடிக்கும் தோட்டத் தெளிப்பான்கள் வெளியேற்றப்பட்டன. மத்திய சதுக்கத்தில் உள்ள ஆடுகளங்கள் மூடப்பட்டு இரவு உறங்கச் செல்வதற்கு முன், அவை நன்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டன. இது வழக்கமான வறண்ட, நொறுங்கும் ஆடுகளம் போல் இல்லை. இறுதியாக, இந்த டெஸ்டில், இந்தியா சமமான ஆட்டக்களத்தை தேர்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil