IND vs AUS Cricket News In Tamil : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடக்கவுள்ளது. இங்கு இங்கிலாந்தில் உருவாகியுள்ள புது வகை கோவிட் - 19 தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். பிரிஸ்பேன் நகரம் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ளதால் அந்த மாகாண அரசு முக்கிய நகரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் அங்கு டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ள இந்திய அணி மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த ஓட்டல்களில் தங்க வைக்கப்பட உள்ளனர்.
இது போன்ற அதீத கட்டுப்பாடுகளுடன் வீரர்களால் போட்டியை சந்திக்க முடியாது என இந்திய அணி நிர்வாகம் புலம்பி வருகின்றது. " பிரிஸ்பேனில் மற்ற வீரர்களின் அறைக்குச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு அறையிலே உணவருந்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றும் அறையை விட்டு வெளியே செல்ல கூட அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. வீரர்கள் விதிகளைப் பின்பற்ற மாட்டார்கள் என கூறவில்லை. ஆனால் அவர்கள் அணியினருடன் தகவல்களை பரிமாறி கொள்ளவதற்கு கொஞ்சம் தளர்வு அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஐந்து நட்சத்திர உணவகம் சிறைச்சாலையாக மாறிவிடும்" என்கிறார் இந்திய அணி நிர்வாக குழுவில் உள்ள நபர்.
பிரிஸ்பேனில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து பி.சி.சி.ஐ மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எந்த வித அதிகாரப்பூர்வ செய்திகளையும் வெளியிடவில்லை. அதோடு எந்த கருத்தும் கூறவில்லை.
"வீரர்களுக்கு அணி நிர்வாகத்தினரை சந்திக்கவும், நீச்சல் குளத்திற்கு செல்லவும், மற்றும் பிசியோதெரபிஸ்ட்களை சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும். மெல்போர்னில் வெளியில் செல்லவும், உணவகத்தில் உண்ணவும் அனுமதிக்க பட்டது. சிட்னியில் ஓட்டலை விட்டு மட்டும் வெளியே செல்ல கூடாது என கூறப்பட்டது. ஆனால் பிரிஸ்பேனில் அறையை விட்டு கூட செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற விதிகளை கடைபிடிக்க வீரர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். வீரர்கள் கேட்பதோ சில தளர்வுகளும், சுத்தமான காற்றும் தான். அதற்கு அவர்கள் பரிசீலித்தாலே போதுமானது" என்று மற்றுமொரு இந்திய அணி நிர்வாக குழுவில் உள்ள நபர் கூறியுள்ளார்.
தொற்று அச்சம்:
'வீரர்கள் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு (பபுள்) முறையில் இருந்து வெளியில் வரக்கூடாது.அப்படி இந்த ஒரு விதியை மட்டும் வீரர்கள் கடைபிடித்தாலே போதுமானது' என்கிறார் குயின்ஸ்லாந்தின் தலைமை சுகாதார மருத்துவர் ஜீனெட் யங்.
கடந்த வியாழக்கிழமை, குயின்ஸ்லாந்து சுகாதார அதிகாரிகள் பிரிஸ்பேன் பகுதிகளில் உள்ள முதியவர்களை அங்குள்ள பராமரிப்பு இல்லங்களுக்கு அனுப்பி அந்த பகுதியை முடக்கியுள்ளனர். இந்த புது வகை தொற்று இங்கிலாந்தில் இருந்து பிரிஸ்பேன் வந்த பெண் ஒருவருக்கு உள்ளது என உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த பெண் பிரிஸ்பேனில் உள்ள ஹோட்டல் கிராண்ட் சான்ஸ்லரில் தனிமை படுத்தப்பட்டு உள்ளார். அதோடு அவர் பயணம் செய்த இடங்களையும் அவர் சந்தித்த நபர்களையும் தேடும் பணியில் அதிகாரிகள் உள்ளனர். அந்த பெண் 4வது டெஸ்ட் போட்டி நடக்கும் இடமான 'தி கப்பா' மைதானத்திற்கு 20 கி /மீ தொலைவில் தான் வசித்து வருகின்றார் என அங்குள்ள ஊடகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து குயின்ஸ்லாந்தின் பிரீமியர் அனாஸ்டாசியா பாலாஸ்ஸ்குக், அடுத்த மாதம் இறுதி வரை சிட்னியில் இருந்து குயின்ஸ்லாந்திற்குள் நுழைய தடை விதித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
"டெஸ்ட் போட்டி நடக்கும் இடத்தில் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு (பபுள்) முறை கட்டமைக்க பட வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியமும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் இணைந்து ஒரு முடிவு எடுப்பார்கள் என நம்புகிறோம். கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு (பபுள்) முறையை பயன்படுத்தி தான் இதுவரை, ஏ.எஃப்.எல் உட்பட பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். மற்றும் இந்த பாதுகாப்பு முறைதான் குயின்ஸ்லாந்து மாகாணத்தை நல்ல நிலையில் வைத்திருக்கின்றது. ஆனால் சிட்னியில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் இங்கு அனுமதி இல்லை, ”என்று பலாஸ்ஸுக் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.