IND vs AUS Cricket Tamil News: இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்த போட்டியை இந்திய அணி சமன் செய்தது. போட்டியின் 5ம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் கிரீஸில் தனக்கு பாதுகாப்பான இடம் என்று மார்க் செய்து வைத்திருந்த இடத்தை ஒருவர் ஷூ- வை வைத்து அழிதுள்ளார். இது அங்கு ஸ்டம்பில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த நபர் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தான் எனத் தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ இணையத்திலும் வைரலாகி வருகின்றது. இதனால் ஸ்மித் பெரும் சர்சையில் சிக்கியுள்ளார்.
இதையடுத்து இங்கிலாந்தில் உள்ள ஊடகங்கள் ஸ்டீவ் ஸ்மித்தை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஸ்மித் இது போல் சர்ச்சையில் சிக்குவது முதல் முறை அல்ல. 2018-ம் ஆண்டு கேப் டவுனில் நடந்த போட்டியில் பந்தை சேதப்படுத்தியது, பெங்களூருவில் நடந்த போட்டியில் அவர் கேட்ட டிஆர்எஸ் என ஸ்மித் மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளன.
இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், தற்போதைய வீரர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் என அனைவருமே தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். போட்டியை நேர்மையாக விளையாடுவதோடு, அதில் வெற்றியோ தோல்வியோ எதிரணியை மதித்து விளையாட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்னர்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் வர்ணனையாளர்களில் ஒருவராக உள்ளார். 'ஸ்மித்தின் இந்த செயல் மிக மிக மோசமானது' என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், இது பற்றி குறிப்பிடும்போது, "இது போன்ற செயல் எதிரணியை பாதிக்குமா அல்லது தன்னைபாதிக்குமா என யோசிக்க கூட தெரியாத வீரராக ஸ்மித் உள்ளார்" என்கிறார்.
"ஸ்மித்தின் இந்த செயல் ஆடுகளத்தின் மேற்பரப்பை மாற்ற வேண்டும் என செய்யப்பட்ட முயற்சியா அல்லது ஸ்மித்தின் தனித்துவமான ஒன்றா?" என பிபிசி-யின் விளையாட்டு செய்தியாளர் ஜாக் ஸ்கெல்டன் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் மற்றும் தலைமை பயிற்சியாளர் டேவிட் லாயிட், ஸ்மித் செய்த செயல் சிறு பிள்ளைத்தனமானது என்று கூறியுள்ளார்.
டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரையில் "ஒரு புதிய கலாசாரம்?" என்ற தலைப்பில் மத்தேயு சையத் பின்னவருமாறு எழுதியுள்ளார். " சிட்னியில் நடந்த 3வது போட்டியில் தொடை பகுதில் ஏற்பட்ட காயத்தால் வேதனையில் இருந்த ஹனுமா விஹாரியை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் தகாத வார்த்தைகளைக் கூறி கடிந்துள்ளார். அதே போல் மிக கடுமையான மற்றும் மோசமான சொற்களை பயன்படுத்தி ரவிச்சந்திரன் அஸ்வினை திட்டியுள்ளார். ஆனால் நடுவரிடம் தான் அப்படி எதுவுமே கூறவில்லை என்று சத்தியம் செய்துள்ளார். இது போன்ற செயல்களால் ஆஸ்திரேலிய அணியின் முகத்திரை கிழிந்திருப்பது இது ஒன்றும் புதிதல்ல மற்றும் இது ஆஸ்திரேலிய அணியின் இரண்டாம் பாகம் (2.0) எனக் கூறலாம்
முந்தைய காலங்களில் ஆஸ்திரேலிய அணியினரின் கிரிக்கெட் கலாச்சாரம், எப்படி இருந்ததோ அப்படித்தான் இன்றும் உள்ளது. இது போன்ற செயல்களால் அவர்கள் தான் குற்றவாளி ஆகின்றனர். மற்றும் இதை ஈசியாக கடந்து விடலாம் என்றும் நினைக்கின்றனர். ஒரு அணியின் வெற்றி ஒருவரை பல வகையில் பாதிக்கலாம். அதற்காக சொந்த அணியினரை கடிந்து கொள்வதோ, எதிர் அணியினரை கடுஞ்சொற்களை பயன்படுத்தி மனதை புண்படுத்தவோ கூடாது " என்று அவரது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்மித்திற்காக வாதாடிய பெயின்
இது பற்றி செய்தியாளர் சந்திப்பில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் , " இது குறித்து நான் ஸ்டீவிடம் பேசியுள்ளேன். மேலும், அவரும் மற்ற வீரர்களை போலவே போட்டி சென்ற விதம் குறித்து ஏமாற்றமடைந்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் ஒரு மிகச் சிறந்த வீரர். ஒவ்வொரு போட்டியிலும் அவர் இதுபோன்று ஐந்து அல்லது ஆறு முறை செய்வார். அதுவும் நிழல்-பேட்டிங் செய்து கற்றுக் கொள்வதற்காகவே அங்கு செல்வார். அப்படி செல்லும் போது அந்த இடத்தை ஷூ - வைக் கொண்டு மார்க் செய்வார். விளையாடும் போது சில நேரங்களில் இடது கையில் ஆட முயற்சி செய்வார். மற்றும் அவர் எப்படி விளையாடலாம் என்று கணிப்பதற்கே அங்கு செல்வார்" என்று கூறினார் .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.