India vs Australia Test Series, Pat Cummins Tamil News: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடர் இந்திய மண்ணில் நடைபெற்று வருகின்றது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த தொடர் வெற்றிகள் மூலம் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் திடீரென தனது சொந்த நாட்டுக்கு திரும்பி உள்ளார். சில நாட்கள் அவர் ஆஸ்திரேலியாவில் தங்குகிறார் என்றும், அவரது குடும்பத்தில் ஏற்பட்ட தீவிர சுகாதார பிரச்சனைகளை முன்னிட்டு நாடு திரும்பியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடும்பத்தில் ஏற்பட்ட தீவிர சுகாதார நோய் காரணமாக தனிப்பட்ட காரணங்களுக்காக பேட் கம்மின்ஸ் சொந்த நாட்டிற்கு பறந்துவிட்டார். இந்தூரில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான தயாரிப்புகளில் மீண்டும் சேர அவர் இந்த வார இறுதியில் இந்தியா திரும்புவார். அவரது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு ஊடகங்களை கேட்டுக்கொள்கிறோம்.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 1-ந்தேதி இந்தூர் நகரில் நடைபெற உள்ளது. பேட் கம்மின்ஸ் சரியான நேரத்தில் இந்தியாவுக்கு வருவார் என்றபோதிலும், அவர் வரமுடியாதபோது, துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழி நடத்துவார்.
கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டனாக கம்மின்ஸ் அறிவிக்கப்பட்ட பின்னர், 2 முறை ஸ்மித் அணியை வழி நடத்தியுள்ளார். 2021-22 காலகட்டத்தில் நடந்த ஆஷஸ் தொடரின்போது, கம்மின்சுக்கு கொரோனா பாதிப்பு நோயாளியுடனான நெருங்கிய தொடர்பால் 2-வது டெஸ்ட் போட்டியை அவர் தவற விட்டார்.
இதேபோல் கடந்த ஆண்டில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியின்போதும், கம்மின்ஸ் காயத்தினால் போட்டியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அணியை ஸ்மித் அப்போது தலைமையேற்று நடத்தினார். டெஸ்ட் போட்டி தொடரை தொடர்ந்து, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் கம்மின்ஸ் கேப்டனாக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வருகிற மார்ச் 1 ஆம் தேதி நடக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil