Border - Gavaskar trophy 2023, Rohit Sharma Tamil News: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று வியாழக்கிழமை தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சிஸ் முடிவில் 63.5 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுசாக்னே 49 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டத்தை விளையாட தொடங்கினர். தொடக்க வீரரான கேப்டன் ரோகித்துடன் கரம் கோர்த்த அஸ்வின் 23 ரன்னிலும், புஜாரா 7 ரன்னிலும், கோலி 12 ரன்னிலும், சூரியகுமார் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்க விக்கெட் சரிவு இருந்தாலும், கேப்டன் ரோகித் நிலைத்து நின்று ஆடி வந்தார். அவர் 171 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இந்த அபார சதத்தின் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 9வது சதத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து ஜடேஜாவுடன் ஜோடி அமைத்து கேப்டன் ரோகித் விளையாடினார். அவர் 212 பந்துகளில் 15 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். எனினும், தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரோகித் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா முன்னிலை பெற உதவி இருந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து தட்டிக்கொடுத்தனர். அந்த அளவிற்கு மிகச் சிறப்பான இன்னிங்க்ஸை விளையாடி இருந்தார்.
வரலாறு படைத்த ஹிட்மேன் ரோகித்… முதல் இந்திய கேப்டன் இவர் தான்!
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் அடித்த சதத்தால் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது ஒரு கேப்டனாக டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்து போட்டிகளிலும் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார். மேலும் . சர்வதேச அளவில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் விளாசிய 4வது கேப்டன் என்ற பெருமையையும் அவர் படைத்திருக்கிறார். இந்த சாதனையை இந்திய கேப்டன்களில் யாரும் படைக்காதது என்பது குறிபிடத்தக்க ஒன்றாகும்.
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக சதம் அடித்த வீரர்கள் பட்டியல்:
தில்சன் (இலங்கை)
பாப் டு பிளெசிஸ் (தென் ஆப்பிரிக்கா),
பாபர் அசாம் (பாகிஸ்தான்)
ரோகித் சர்மா (இந்தியா).
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil