KL Rahul Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் தொடக்க வீரர் கே.எல்.ராகுல். கடந்த 2014 ஆண்டில் இந்திய அணியில் அடியெடுத்து வைத்த வீரர் மிகச்சிறந்த அதிரடித் தொடக்க வீரராக உருவாக்கியுள்ளார். இந்திய அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகளில் 2547 ரன்களையும், 45 ஒருநாள் போட்டிகளில் 1665 ரன்களையும், 61 டி-20 போட்டிகளில் 1963 ரன்களையும் எடுத்துள்ளார். மேலும், இவர் சர்வதேச போட்டிகளில் 14 சதங்களையும், 40 அரைசதங்களையும் விளாசி இருக்கிறார்.
தற்போது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வழிநடத்தி வரும் ராகுல், நடப்பு சீசனில் அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றிருந்தார். அந்த அணியில் தொடக்க வீரராக அவர் 51.33 சராசரி மற்றும் 135.35 ஸ்ட்ரைக் ரேட்டில் இரண்டு சதங்கள் உட்பட 616 ரன்களை குவித்து இருந்தார்.
ஆனால், ஸ்போர்ட்ஸ் ஹெர்னியாவுக்கான அறுவை சிகிச்சை மேற்கொண்ட ராகுல், அதன்பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். தென்ஆப்பிரிக்க தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் அந்த தொடரில் விளையாட முடியவில்லை. பின்னர் ஜிம்பாப்வே எதிரான தொடரில் கேப்டனாக இந்திய அணியை அவர் வழிநடத்தி இருந்தார்.
அதன்பிறகு, சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் ராகுல் இடம்பிடித்து இருந்தார். இந்த தொடரில் ராகுல் மந்தமாக ஆடியதால், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அவர் அணியில் இடம் பிடித்திருப்பது குறித்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் கேள்வியெழுப்பி இருந்தார்கள்.
இந்நிலையில், தற்போது ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்க ஆயத்தமாகி வருகிறார். இதனிடையே, நேற்று மொஹாலியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டார். பின்னர், அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இந்த நிலையில், ராகுலின் டி20 ஸ்டிரைக் ரேட் மீதான விவாதம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "என்ன விமர்சனம்?" என்று அவர் கேள்வியெழுப்பினார். மேலும், ஸ்ட்ரைக்-ரேட் உங்களுக்கு முழு கதையையும் சொல்லாது என்றும், அதில் தான் அதீத கவனம் செலுத்தி வருவதாகவும் ராகுல் கூறினார்.
"ஸ்ட்ரைக்-ரேட் விகிதங்கள் ஒட்டுமொத்த அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. அந்த பேட்ஸ்மேன் எப்போது ஒரு குறிப்பிட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார், 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது அவருக்கு முக்கியமா?, அணி 100 மற்றும் 120 ரன்களில் வெற்றி பெற்றிருக்குமா? என்பதை நீங்கள் பார்ப்பதே இல்லை.
எனது ஸ்டிரைக்-ரேட் நான் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறேன். நான் அதை நோக்கி உழைத்து வருகிறேன், நான் ஒரு தொடக்க ஆட்டக்காரராக என்னை எப்படி மேம்படுத்துவது மற்றும் நான் பேட்டிங் செய்ய வெளியே செல்லும்போது எனது அணிக்கு எவ்வாறு அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதைப் பார்க்கிறேன், ” என்று அவர் கூறினார்.
ராகுலின் டி20 போட்டி ஸ்டிரைக்-ரேட் 140.91 ஆக உள்ளது. இது அவரது ஒட்டுமொத்த டி20 ஸ்டிரைக் ரேட் 137.35ஐ விட சற்று அதிகம் ஆகும்.
ரோஹித் மற்றும் டிராவிட் ஆதரவு
தற்போதைய அணி நிர்வாகம், வீரர்கள் தோல்வியை கண்டு அஞ்சாத சூழலை உருவாக்கி உள்ளதாகவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரின் ஆதரவை தனக்கு கிடைத்துள்ளதாகவும் ராகுல் அந்த சந்திப்பில் குறிப்பிட்டு இருந்தார்.
"அந்த டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும் ஒரு வீரருக்கு அவரது கேப்டன், பயிற்சியாளர் மற்றும் சக வீரர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியமான விஷயம். ஒவ்வொரு முறையும் ஒரு வீரர் வெற்றி பெறுவதில்லை. வீரர்கள் தோல்விக்கு பயப்பட மாட்டார்கள், தவறு செய்ய பயப்படுவார்கள் என்ற ஒரு வகையான சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
நாங்கள் எங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் மற்றவர்களை விட நம்மையே அதிகம் விமர்சிக்கிறோம். எனவே நாம் நன்றாகச் செய்யாதபோது, அது மிகவும் வலிக்கிறது. எனக்கு ஒரு கேப்டன், பயிற்சியாளர் மற்றும் துணை ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் கடினமான பாதையில் செல்லும் வீரர்களை ஊக்குவிக்கிறார்கள். ஒவ்வொரு தனிமனிதனும் சிறிதளவு ஆதரவைப் பார்க்க விரும்புகின்றேன். அதுவே எனக்குக் கிடைத்துள்ளது.
நல்ல மன நிலையில் ராகுல்
"நான் நன்றாக உணர்கிறேன். காயத்திற்குப் பிறகு நான் திரும்பி வந்து சில ஆட்டங்கள் ஆகின்றன. ஆசியக் கோப்பையிலும் ஜிம்பாப்வேயிலும் நடுவில் அந்த நேரத்தைப் பெறுவது எனக்கு மிகவும் முக்கியமானது. உள்நாட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சவாலை எதிர்நோக்குகிறேன்; எனக்கு சிறிது நேரம் ஆகிவிட்டது” என்று ராகுல் கூறினார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.