IND vs AUS, 1st T20I Score Updates in tamil: India vs Australia, 1st T20I: பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டி-20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகிறது. இதில், அந்த அணி இந்தியாவை எதிர்கொள்ளும் முதலாவது டி-20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்றிரவு அரங்கேறுகிறது. இதையொட்டி, இரு அணி வீரர்களும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Hello from Mohali for the #INDvAUS T20I series opener! 👋#TeamIndia pic.twitter.com/FI9cdsviP3
— BCCI (@BCCI) September 20, 2022
இந்திய அணியைப் பொறுத்தவரை, ஆசிய கோப்பை தோல்விக்கு பிறகு அந்த அணி களமாடும் முதல் போட்டியாகும். டி-20 உலக கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரை சரியாக பயன்படுத்திக்கொள்ள இந்திய அணி திட்டமிட்டு வருகிறது. இதனால் தான் உலக கோப்பையில் களமிறக்கவுள்ள அதே அணியுடன் இந்திய அணி இந்த தொடரில் விளையாடுகிறது.
ஆசிய கோப்பை தொடரின் தோல்விக்கு இந்திய அணியின் டாப் பேட்டிங் ஆடர் தான் முக்கிய காரணமாக இருந்தது. இதனால், அந்த வரிசையில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசி மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலியின் பேட்டிங் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாகிய கேப்டன் ரோகித் சர்மா - லோகேஷ் ராகுல் ஜோடி ஆசிய கோப்பையில் மெச்சும் படியான பார்ட்னர்ஷிப்பை அமைக்கவில்லை. மாறாக சொற்ப ரன்களே எடுத்து இருந்தனர். இதனால், இந்த ஜோடி நல்ல தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும். தனது மந்தமான ஆட்டத்திற்கும், வீழ்ந்து போன ஸ்ட்ரைக் ரேட்டிற்கும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் ராகுல் அதற்கு முற்றிப்புள்ளி வைக்கும் வகையில், தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
இந்தியாவின் மிடில் ஆடர் அணிக்கு எப்போதும் மெச்சும்படி இருப்பதில்லை. அதை சரி செய்வதில் இந்த முறை கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று நம்பலாம். உலக கோப்பைக்கான விக்கெட் கீப்பராக யார் இருப்பார் என்கிற கேள்வியும், ரிஷப் பண்ட் vs தினேஷ் கார்த்திக், இதில் யார் மிடில் - ஆடரில் பொருந்துவார் என்கிற கேள்விகளும் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கின்றன. உலகக் கோப்பைக்கு முன் எஞ்சியிருக்கும் இரண்டு தொடர்களில் அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிப்பார்கள் என்று நம்புலாம்.
காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் அணிக்கு திரும்பியிருப்பது பந்து வீச்சை வலுப்படுத்தும். காயத்தால் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெறாத நிலையில் மற்றொரு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சாம்பியனாக வலம் வரும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகிய முன்னணி வீரர்களுக்கு லேசான காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் அந்த அணி வலுவாகவே உள்ளது. பேட்டிங்கில் மிரட்ட ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். ஆல்-ரவுண்டர் டிம் டேவிட் அறிமுக வீரராக விளையாட இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அவர் அணியின் 'எக்ஸ்-பேக்ட்டர்' என்கிற பேச்சும் அடிபட்டு வருகிறது.
பந்து வீச்சு வரிசையில் ஹேசில்வுட், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் நம்பிக்கை அளிக்கிறார்கள்.அதே சமயம் கேப்டன் ஆரோன் பிஞ்ச், சமீப காலமாக போதிய ரன் எடுக்க முடியாமல் தடுமாறுவது தான் அந்த அணிக்கு சற்று பலவீனமாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் சம பலத்துடன் உள்ள இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
இன்றைய போட்டி நடக்கும் மொகாலி மைதானத்தில் இதுவரை ஐந்து டி- 20 ஆட்டங்கள் நடந்துள்ளன. இவற்றில் இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது. இதில் 2016-ம் ஆண்டு டி20 உலக கோப்பை சூப்பர்10 சுற்றில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதும் அடங்கும்.
நேரடி ஒளிபரப்பு
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர் , தீபக் ஹூடா, உமேஷ் யாதவ்
ஆஸ்திரேலியா:
ஆரோன் பின்ச் (கேப்டன்), மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், கேமரூன் கிரீன், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், சீன் அபோட், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஜோஷ் இங்கிலிஸ் , நாதன் எல்லிஸ்
இரு அணி உத்தேச வீரர்கள் பட்டியல்:
இந்தியா:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
ஆஸ்திரேலியா:
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதலாவது போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களம் இறங்கினர்.
இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களில் அவுட் ஆனார். விராட் கோலி 2 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
3வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலுடன் சூர்ய குமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை வேகமான உயர்த்தினர். அதிரடியாக விளையாடி கே.எல். ராகுல் அரைசதம் அடித்தார்.
கே.எல்.ராகுல் - சூர்ய குமார் யாதவ் ஜோடி 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் ரன் சேர்த்திருந்த நிலையில் கே.எல். ராகுல் 55 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனாலும், விடாமல் அதிரடியாக விளையாடிய சூர்ய குமார் யாதவ் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து, ஹர்த்திக் பாண்ட்யா, அக்ஷர் ஜோடி சேர்ந்தனர். அக்ஷர் பட்டேல் 6 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து, பாண்ட்யாவுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இதில் கார்த்திக் 6 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து ஹர்சல் பட்டேல் களம் இறங்கினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா அரைசதம் அடித்தார். முடிவில் இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா சிக்சர் மழை பொழிந்து 30 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.
இதனால், ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் கேமரூன் கிரீன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய ஆரோன் பிஞ்ச் 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக கேமரூன் கிரீனுடன் ஸ்டிவன் சுமித் ஜோடி சேர்ந்தார். கேமரூன் கிரீன் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். 30 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
அவரைத்தொடர்ந்து சுமித் 35 (24) ரன்களும், மேக்ஸ் வெல் 1 ரன்னும், ஜோஸ் இங்லீஸ் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, டிம் டேவிட் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி ஆஸ்திரேலிய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 2 ரன்கள் தேவைப்பட்டநிலையில் டிம் டேவிட் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் மேத்யூ வேட் 45 (21) ரன்களும், பேட் கம்மின்ஸ் 4 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி 19.2 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், சாஹல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.