India vs Bangladesh 1st Test Day 1 Highlights: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Bangladesh Live Score, 1st Test Day 3
இந்நிலையில், இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் காலை 9:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் நாள் ஆட்டம்: டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் - இந்தியா பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமாடிய நிலையில், ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டி ரோகித் 6 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த கில் டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இதன்பிறகு வந்த கோலியும் 6 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் அணியின் விக்கெட் சரிவை மீட்டார். அவர் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடம் ஜோடி அமைத்து சிறப்பாக மட்டையை சுழற்றி வந்தார். 52 பந்துகளில் 6 பவுண்டரிகளை விரட்டிய அவர் 39 ரன்னில் அவுட் ஆனார். டாப் ஆடரில் இந்த வீரர்கள் விக்கெட்டையும் வங்கதேசத்தின் ஹசன் மஹ்மூத் என்கிற 24 வயதான இளம் வீரர் தான் சாய்த்து மிரட்டினார்.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்து வந்த கே.எல் ராகுலுடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மெது மெதுவாக ரன்களை எடுத்து வந்தது. இதில் அரைசதம் அடித்து அசத்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 118 பந்துகளில் 9 பவுண்டரிகளை விரட்டி 56 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவர் நஹித் ராணா பந்தில் ஷத்மன் இஸ்லாம் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருடன் நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை அமைத்த கே.எல் ராகுல் 52 பந்தில் ஒரு பவுண்டரியுடன் 16 ரன்னுக்கு அவுட் ஆனார்.
ஆங்கிலத்தில் படிக்க: India vs Bangladesh Live Score, Day 1 Test Match: BAN wins toss and opts to bowl first vs IND in Chennai
சதமடித்து சரிவில் இருந்து மீட்ட அஸ்வின் - தோள் கொடுத்த ஜடேஜா
இந்த இக்கட்டான சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் - ரவீந்திர ஜடேஜா ஜோடி அமைத்தனர். இவர்களும் சீக்கிரமே ஆட்டமிழந்து வெளியேறுவார்கள் என வங்கதேசம் கணக்குப் போட்ட நிலையில், 144 ரன்னுக்கு பார்ட்னர்ஷிப்பை அமைத்த அஸ்வின் - ஜடேஜா ஜோடி முதல் நாள் ஆட்டம் முடியும் வரை களத்தில் இருந்தனர். இருவரும் தொடக்கத்தில் நிதானமாக மட்டையை சுழற்றி வந்தனர்.
ஆனால், அடுத்தடுத்த ஓவர்களில் வேகம் கூட்டினர். வங்கதேச அணியின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளிய இந்த ஜோடியில் இருவரும் அசத்தலான அரைசதம் அடித்தனர். ஜடேஜா தனது பாணியில் மட்டையை சுழற்றி அரைசதத்தை அறிவிக்கையில், அஸ்வின் 75 ரன்கள் எடுத்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்த ஆட்டத்தில் ஷாகிப் அல் ஹசன் வீசிய 77.3-வது ஓவரில் ஒரு ரன் எடுத்த அஸ்வின் தனது 6வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார். அவரது சொந்த ஆடுகளத்தில் அவர் விளாசும் 2வது டெஸ்ட் சதம் இதுவாகும். தொடர்ந்து அவர் ஜடேஜாவுடன் இணைந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவருமே மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
112 பந்துகளை எதிர்கொண்ட அஸ்வின் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் எடுத்தும், 117 பந்துகளை சந்தித்த ஜடேஜா 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 80 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது.
2-ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
தொடர்ந்து 2ம் நாள் ஆட்டத்தில் பேட்டிங் ஆட களமாடிய இந்தியாவின் அஸ்வின் - ஜடேஜா ஜோடி நிதானமாக பந்துகளை விரட்டியது. இந்த ஜோடியில் சதம் விளாசுவர் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 86 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஆகாஷ் தீப் 17 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். சொந்த மைதானத்தில் சதம் விளாசி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஸ்வின் 133 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
களத்தில் இருந்த ஜஸ்பிரித் பும்ரா - முகமது சிராஜ் ஜோடியில், பும்ரா 7 ரன்களுக்கு ஆட்டமிழக்கவே, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இறுதியில், 91.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணி 376 ரன்கள் எடுத்தது.
வங்கதேசம் பேட்டிங்
இதனையடுத்து, வங்கதேசம் அணி அதன் முதல் இன்னிங்சில் ஆடியது. ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், நஹித் ராணா.
வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக ஷத்மான் இஸ்லாம் - ஜாகிர் ஹசன் ஜோடி களமாடிய நிலையில், இந்திய வேகப் புயல் பும்ரா வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்னுக்கு ஷத்மான் இஸ்லாம் அவுட் ஆனார். தொடர்ந்து, இந்தியா அதிரடியாக பவுலிங் வீசிய நிலையில், ஆகாஷ் தீப் வீசிய 8.1வது ஓவரில் 3 ரன்னுக்கு ஜாகிர் ஹசன் அவுட் ஆனார். அடுத்து வந்த மொமினுல் ஹக் ஆகாஷ் தீப் வீசிய அடுத்த பந்தில் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Bangladesh Live Score, 1st Test Day 2
இதனிடையே சிறிது நேரம் தாக்குப்பிடித்து கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 20 ரன் எடுத்த நிலையில், சிராஜ் பந்தில் கோலி வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருடன் ஜோடியில் இருந்த முஷ்பிகுர் ரஹீம் 8 ரன்னுக்கு அவுட் ஆனார். வங்கதேச அணி 40 ரன்னுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து ரன் சேர்க்க தடுமாறி வந்தது. இந்த சூழலில் களத்தில் இருந்த ஷாகிப் அல் ஹசன் - லிட்டன் தாஸ் ஜோடி சிறிது நேரம் விக்கெட் சரிவை கட்டுப்படுத்தினர்.
இந்தியாவின் பந்துவீச்சை சாதுரியமாக சமாளித்து வந்த இந்த ஜோடியில், 22 ரன் எடுத்த லிட்டன் தாஸ் ஜடேஜாவின் சுழலில் சிக்கி அவுட் ஆனார். அவருடன் ஜோடி அமைத்திருந்த ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் கீப்பர் பண்ட் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஹசன் மஹ்மூத் 9 ரன்னுக்கு அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த தஸ்கின் அகமது பும்ராவின் அபார யார்க்கர் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்து 11 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
களத்தில் இருந்த மெஹிதி ஹசன் மிராஸ் - நஹித் ராணா ஜோடியில், நஹித் ராணா சிராஜ் பந்தில் 11 ரன்னுக்கு ஆட்டமிழ்க்கவே, வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த வங்கதேசம் 149 ரன்களுக்குள் சுருண்டது. அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டையும், சிராஜ், ஆகாஷ், ஜடேஜா தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்தியா பேட்டிங்
இதனைத் தொடர்ந்து, 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் - ஜெய்ஸ்வால் ஜோடி களமாடினர். இம்முறையும் ஏமாற்றம் அளித்த கேப்டன் ரோகித் சர்மா, இன்னிங்சின் 3-வது ஓவரிலேயே தஸ்கின் அகமது பந்துவீச்சில் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைதொடர்ந்து, சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வாலும் 10 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா தடுமாறியது.
இதன்பின்னர், கில்லுடன் ஜோடி அமைத்த விராட் கோலி சிறிது நேரம் போராடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், 37 பந்துகளை சந்தித்த அவர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சுப்மன் கில் நிலைத்து விளையாடினார். 2-வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களுடன் தடுமாறியது. கில் 33 ரன்களுடனும், பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
3-ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
தொடர்ந்து 3ம் நாள் ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. களத்தில் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்த கில் - பண்ட் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடியில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். மதிய உணவு இடைவெளியின் போது இந்தியா 51 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து, வாங்கதேச அணியை விட 432 ரன்கள் முன்னிலை பெற்றது. அரைசதம் அடித்த கில் - பண்ட் ஜோடியில், கில் 86 ரன்னுடனும், பண்ட் 82 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து, பேட்டிங் ஆட களம் புகுந்த இந்திய அணியின் கில் - பண்ட் ஜோடியில், பண்ட் 105 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். இதன் மூலம் தனது 6வது டெஸ்ட் சதத்தை சென்னை மண்ணில் பதிவு செய்தார். தொடர்ந்து அடித்து நொறுக்கிய பண்ட் 128 பந்துகளில் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 109 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அவருடன் பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்த கில் அடுத்து வந்த கே.எல் ராகுலுடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடியில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 161 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் கில் தனது 5வது டெஸ்ட் சதத்தை சென்னையில் பதிவு செய்துள்ளார். தங்களது சிறப்பான ஆட்டத்தை கில் - ராகுல் ஜோடி வெளிப்படுத்தி வந்த நிலையில், இந்திய அணி 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக கேப்டன் ரோகித் அறிவித்தார். களத்தில் ஆட்டமிழ்க்காமல் இருந்த கில் 176 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 119 ரன்கள் எடுத்தார். 19 பந்துகளில் 4 பவுண்டரியை விரட்டிய கே.எல்.ராகுல் 22 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசம் பேட்டிங்
இதனையடுத்து, 515 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திட வங்கதேச அணி அதன் 2வது இன்னிங்சில் களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ஷத்மான் இஸ்லாம் - ஜாகிர் ஹசன் களமாடினர். இந்த ஜோடியை ஆட்டத்தின் 16.2-வது இந்திய வேகப் புயல் பும்ரா உடைத்தார். 47 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸரை பறக்கவிட்ட ஜாகிர் ஹசன் 33 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷத்மான் இஸ்லாம் 35 ரன் எடுத்திருந்த போது அஸ்வின் சுழலில் சிக்கி வெளியேறினார்.
இதன்பிறகு வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - மொமினுல் ஹக் ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில், 13 ரன்கள் எடுத்த மொமினுல் ஹக் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். இதேபோல், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டி 13 ரன் எடுத்த முஷ்பிகுர் ரஹீம் விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தினார்.
தனி ஒருவரான போராடி வரும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் அடித்து 51 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். அவருடன் ஜோடி அமைத்திருக்கும் ஷகிப் அல் ஹசன் 5 ரன்னுடன் களத்தில் இருக்கவே, 3 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 357 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் காலை 9:30 மணிக்கு 4ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெறும்.
4 ஆம் நாள் ஆட்டம்
இன்றைய ஆட்டத்தை தொடங்கிய நஜ்முல் மற்றும் ஷகிப் இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். வங்கதேசம் 194 ரன்கள் எடுத்திருந்தப்போது ஷகிப் 25 ரன்களில் அவுட் ஆனார். அவர் அஸ்வின் பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் ஒரு ரன்னில் வெளியேறினார். அவர் ஜடேஜா பந்தில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து மெஹிடி 8 ரன்களில் அவுட் ஆனார். அவர் அஸ்வின் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து தஸ்கின் களமிறங்கிய நிலையில், மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த நஜ்மல் 82 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஜடேஜா பந்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்து ஹசர் களமிறங்கிய நிலையில், மறுமுனையில் ஆடி வந்த தஸ்கின் 5 ரன்களில் அவுட் ஆனார். அவர் அஸ்வின் பந்தில் சிராஜிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்ததாக ரானா களமிறங்கினார். ஆனால் மறுமுனையில் ஆடிய ஹசர், ஜடேஜா பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். இதனையடுத்து வங்கதேச அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வங்கதேச அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்களையும், ஜடேஜா 3 விக்கெட்களையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
வங்கதேசம்: ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், நஹித் ராணா.
நேருக்கு நேர்
இந்தியாவும் வங்கதேசமும் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 13 ஆட்டங்களில் இந்தியா 11ல் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் வங்கதேசம் ஒருமுறை கூட முறையும் வெற்றி பெறவில்லை. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
இந்தியா (முதல் டெஸ்ட்): ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், எம்.டி. சிராஜ், ஆகாஷ் தீப், யாஷ் தயாள்.
வங்கதேசம்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), லிட்டன் குமர் தாஸ் (விக்கெட் கீப்பர்), தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன் , ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, நஹித் ராணா, சையத் கலீத் அகமது, ஜாக்கர் அலி அனிக்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.