வங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், கங்குலி தலைமையிலான பிசிசிஐக்கு இரண்டு முக்கிய கேள்விகளுக்கு காம்ப்ரமைஸ் பதில் கிடைத்துள்ளது.
நம்பர்.4 ஸ்லாட் யார்?
நம்பர்.4 ஸ்லாட்டுக்கு மாற்று வீரர் யார்?
ஆகிய இவ்விரு கேள்விகளுக்கு
ஷ்ரேயாஸ் ஐயர்,
லோகேஷ் ராகுல்
என்று ஒரே டெம்போவில் நேற்று பதில் கிடைத்துள்ளது.
இதுவரை இந்தியாவுக்கு ஒரு தனி சுற்றுப்பயணம் வங்கதேசம் மேற்கொண்டதே கிடையாது. முதன் முறையாக தற்போது தான் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட வங்கதேசம் அழைக்கப்பட்டது.
அதற்கு முக்கிய காரணம், இந்தியாவுக்கு என்று சில டி20 தேடல்கள் இருந்தது தான். நான்காம் நிலை வீரர் யார்?, இந்தியாவின் மூன்றாவது முக்கிய சீம் பவுலர் யார்?, ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கான மாற்று யார்? தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார்? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறது இந்தியா.
சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 களத்தில், இந்தியா மேற்சொன்ன கேள்விகளில் ஒன்றிற்கு கூட பதில் கண்டறியவில்லை.
ஆனால், நேற்று நடந்து முடிந்த வங்கதேச தொடர், ஓரளவுக்கு நம்பிக்கையான பதிலை கொடுத்திருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்தால் தோற்றுவிடுவோம் என்று கேப்டன் ரோஹித்தே நம்பிய நிலையில், எப்படியாவது டாஸ் வென்றுவிட வேண்டும் என மாரியம்மனுக்கு வேண்டாத குறை தான். ஆனால், ஏதோ கோபத்தால் ஆத்தா குறைவைக்க, வங்கதேசம் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த போதே, ரோஹித் முகத்தில் ரத்தம் பாய்வது நின்று போனது.
எதிர்பார்த்தது போல, ஷஃபியுல் வீசிய இன்கம்மிங் டெலிவரியில், ரோஹித் தனது ஆஃப் ஸ்டம்ப் எங்கே? என்று தேடிக் கொண்டிருக்க, தவான் எப்படி அடிப்பது என்று தெரியாமல், ஒரு குத்து மதிப்பாக சுற்றிக் கொண்டிருந்தார்.
நல்ல நேரம் இருந்தபோது பவுண்டரி சென்றாலும், ஷஃபியுல் ஓவரிலேயே கேட்ச் ஆகி வெளியேறினார்.
5.2 ஓவர்களுக்கு 35-2. இந்தியாவின் ஓப்பனர்ஸ் பெவிலியனில்.
அடுத்த 30 - 40 நிமிடங்கள் தான் இந்தியாவுக்கு மிக மிக மதிப்புமிக்க நிமிடங்கள் ஆகும். அந்தப் போட்டிக்கு மட்டுமானது அல்ல... அடுத்த சில வருடங்களுக்கும் சேர்த்து தான்.
விராட் கோலியின் ஒன்டவுன் ஸ்லாட்டில் களமிறங்கிய லோகேஷ் ராகுலும், 4வது இடத்தில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயரும் ஆடிய விதம், உச்சபட்ச பாஸிட்டிவ் மோடில் இருந்த வங்கதேச வீரர்களின் மனநிலையை கேலி செய்தது என்றால் அது மிகையல்ல.
ஐயர், பூஜ்யத்தின் போதே, ஒரு கேட்ச் வாய்ப்பு கொடுத்து தப்பித்திருந்தாலும், அதன் பிறகு அவரது 33 பந்துகளில் 62 ரன்கள் என்ற 'அடங்காத ஆட்டத்திற்கு' ஹை பிட்சில் பிகில் ஊதலாம்.
ராகுலின் 35 பந்துகளில் 52 என்பது, ஷ்ரேயாஸ் ஐயருக்கே கான்ஃபிடன்ட் கொடுத்த இன்னிங்ஸ் ஆகும். முதல் டி20 போட்டியில், ஒருபக்கம் விக்கெட் சரிந்து கொண்டே இருந்ததால், அன்றும் இதே கான்ஃபிடன்ட்டில் அதிரடியாக ஆடிய ஐயர், பெரிய இன்னிங்ஸை கொடுக்க முடியாமல் தோற்றார்.
ஆனால், நேற்று ராகுல் பக்கபலமாக நிற்க, நம்பிக்கையுடன் பந்துகளை அப்பர் ஸ்டேண்டுகளுக்கு இன்ஸ்டால்மென்ட்டில் அனுப்பிக் கொண்டே இருந்தார். மொத்தம் 5 சிக்ஸர்கள். வேறென்ன வேண்டும்!.
மறக்க வேண்டாம் 2020 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. அங்கு லோகேஷ் போன்றோரின் டீசண்ட் ஷாட்ஸ் அடிக்கவும் ஆள் வேண்டும், ஐயர் போன்று பந்துகளை க்ரஷ் செய்யவும் ஆட்கள் வேண்டும்.
தொடக்கத்தை ரோஹித் - தவான் கூட்டணி பார்த்துக் கொள்ளும். ஒன் டவுன் ரன் மெஷின் கோலி. நான்காவது ஷ்ரேயாஸ் ஐயர்... என்று அணி கட்டமைக்கப்பட்டால் நிச்சயம் வலுவான பேட்டிங் லைன் அப் கொண்ட அணியாக இந்தியா இருக்கும்.
ஆனால், விக்கெட் கீப்பர் யார் என்பதில் தான் பிசிசிஐ திருப்தியில்லாமல் இருக்கிறது. தோனி ஆடுவது 70 சதவிகதம் சந்தேகம் தான் என்பதால், ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருக்கும் ரிஷப் பண்ட், தென்.ஆ., மற்றும் வங்கதேச தொடரில் மிக மோசமாகவே தோற்றுப் போயிருக்கிறார்.
தேர்வுக்கான குறைந்தபட்ச நியாயத்தை கூட அவரால் செய்ய முடியவில்லை.
இருப்பினும், ரோஹித் சொன்னது போன்று, இன்னும் சில காலத்திற்கு ரிஷப் பற்றி ரசிகர்கள் பேசாமல் இருப்பதே நல்லது!.
அது சரி, நம்பர்.4 ஸ்லாட்டுக்கு மாற்று வீரர் யார்?
அதுவும் லோகேஷ் ராகுல் தான். அதற்கு காரணமும் லோகேஷ் ராகுல் தான்.
பொதுவாக, ஓப்பனரான லோகேஷ் ராகுலுக்கு, ஓப்பனிங்கில் இறங்க எப்படியும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. நான்காம் நிலை வீரருக்கான இடத்தில், இவரை விட பெஸ்ட் ஐயர் தான் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
ஆகையால், ஐந்தாவது வீரராக இவரை பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை, ஐயருக்கு காயம் ஏற்பட்டு அணியில் இடம் பெற முடியாமல் போனால், அப்போது, 4வது ஸ்லாட்டுக்கு மாற்று ராகுல் தானே!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.