முதல் பகல் - இரவு டெஸ்ட் : உள்ளூரில் நம் பலத்தை நாமே இழப்பது வேடிக்கை!

Sriram Veera

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்கும் பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் குறித்த பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், இந்திய அணியில் இளஞ்சிவப்பு பந்து குறித்து முணுமுணுப்பு அதிகரித்து வருகிறது. கவலை என்னவென்றால், இளஞ்சிவப்பு பந்து, உள்நாட்டில் இந்திய பந்துவீச்சு தாக்குதலின் முக்கிய பலங்களை ஒன்றுமில்லாமல் செய்யத் துணிகிறது. அதாவது, இந்தியாவின் உள்நாட்டு பலமான ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் ஸ்பின் பந்துவீச்சு பாதிக்கப்படும் என இந்தியா கவலை கொள்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய இந்திய அணி நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர், “இந்த பிரச்சினைகள் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்டின் போது உருவாகாது, ஆனால் இது எதிர்காலத்திற்கு முக்கியமானது. பாரம்பரிய இந்திய பலம் இல்லாமல் இந்தியாவில் கடுமையான எதிர் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிக்கு செல்வது புத்திசாலித்தனமா? அது எதிர் அணிகளின் கைகளில் போட்டியை கொண்டு சேர்த்துவிடும். சில வெளிநாட்டு சூழல்களில் இது ஒரு நன்மை என்றாலும், இந்திய சூழ்நிலையில் இது பெரும் குறைபாடே” என்றார்.


கொல்கத்தாவில் பயன்படுத்தப்படவுள்ள இளஞ்சிவப்பு பந்துகளை எஸ்.ஜி என்ற இந்திய நிறுவனம் தயாரித்துள்ளது. இப்போதைக்கு, அணி ஒரு திறந்த மனதுடன், இந்திய நிலைமைகளில் பந்து எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்பதை காத்திருந்து பார்க்க உள்ளது. இருப்பினும், “சில சிக்கல்கள்” பயிற்சிகளின் போது ஏற்பட்டிருக்கிறது.

முதல் கவலை பந்தின் நிறம். இதுகுறித்து, ஆர் அஷ்வின் பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்டின் போது இந்தூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தொடக்கத்தில், இது இளஞ்சிவப்பு பந்தா அல்லது ஆரஞ்சு நிற பந்தா என்று எனக்குத் தெரியாது” என்றார்.

போட்டியின் போது அதன் நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஏதுவாக, பந்தில் கூடுதலாக அரக்கு பூசப்பட்டிருப்பது காரணமாக இருக்கலாம் என்று அணியில் உள்ள சிலர் நம்புகின்றனர். “இளஞ்சிவப்பு அரக்கு லெதருடன் கலக்கும்போது, அது விளக்குகளின் கீழ் (ஸ்டேடியம் லைட்டுகள்) ஒரு ஆரஞ்சு நிறத்தை வெளிப்படுத்துகிறது. உண்மையில், மேற்பரப்பு Scratch செயப்படும் போது, நிறம் இளஞ்சிவப்பு நிறமாக மாறும்” என்று இந்திய அணி நிர்வாக உறுப்பினர் ஒருவர் கூறினார்.

இருப்பினும், தீவிர கவலை இந்தியாவின் பந்துவீச்சு பலத்தை பற்றியே. “கூடுதல் அரக்கு என்பது மட்டும் விஷயமல்ல. டிராக், அவுட் ஃபீல்டில் இன்னும் நிறைய புற்கள் உள்ளது, இதனால் பந்து அதன் நிறத்தையும், பிரகாசத்தையும் இழக்கும். போட்டியின் போது, இது ரிவர்ஸ் ஸ்விங்கை தடுக்கக்கூடும்” என்று ஒரு வீரர் கூறினார்.

“இளஞ்சிவப்பு பந்து அத்தகைய கண்டிஷன்களை கோருகிறது என்றால், டெஸ்ட் போட்டிகளுக்கு Dry பிட்சகள் இருக்க முடியாது. பனி காரணி மூலம், டிராக் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளுக்கு ஒருபோதும் உகந்ததாக இருக்காது. அதிகமான மக்கள் டெஸ்ட் போட்டிகளை பார்க்க வர வேண்டும் என்பதற்காக, முக்கியமான மற்றும் கவர்ந்திழுக்கக் கூடிய கிரிக்கெட் திறனை இழப்பது விவேகமானதா?” என்று அந்த வீரர் கேள்வி எழுப்புகிறார்.

முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரின் தாக்குதலில் (பும்ரா மற்றும் குமார் தற்போதைய அணியில் இல்லை) ரிவர்ஸ் ஸ்விங் மிக முக்கியமான ஆயுதமாக பார்க்கப்படுகிறது. ஐந்து பேரும் புதிய பந்தை விரும்புவர், இது ஆரம்பத்தில் இன்னும் அதிகம் ஸ்விங் ஆகும். பழைய பந்தை ஸ்விங் செய்ய உதவும் சூழலை அவர்கள் நிச்சயம் இழப்பார்கள்.

“இது கண்டிப்பாக ஒரு கவலையான விஷயமாகும். வலிமையான அணிகளுக்கு எதிராக, இது இந்தியாவின் பந்துவீச்சு கலவையை சோதனைக்குள்ளாக்கும்” என்று அணி நிர்வாக உறுப்பினர் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில், பனி காரணியை தவிர்க்க, டெஸ்ட் போட்டி பிற்பகல் 1 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் குளிர் சூழலில், பாதிக்கும் மேலான ஆட்டம் விளக்குகளின் கீழ் நடைபெறும். இதனால், ஈரமான பந்து மென்மையாகி சுழற்பந்து வீச்சாளர்களை பாதிக்கும்.

“சில காரணங்களால், அரக்கு வெளிறிய பிறகு, பந்து ஸ்விங் ஆவது குறையும். எனவே பிங்க் பந்து அதிக நேரம் எக்ஸ்ட்ரா ஸ்விங் ஆகப் போவதில்லை… முதல் 20 ஓவர்கள் ஸ்விங் ஆகலாம், பிறகு என்ன நடக்கும்? ” என்று அந்த வீரர் கூறினார்.

“உலகெங்கிலும் உள்ள அணிகள் இந்தியாவில் இளஞ்சிவப்பு பந்து டெஸ்ட்டில் நிச்சயம் அழுத்தம் கொடுக்கும். ஆனால் பந்து நம் நிலைமைகளில் எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதை கவனமாக மதிப்பீடு செய்த பின்னரே இதுபோன்ற முடிவு எடுக்கப்படும். இந்தியாவில் விளையாடும்போது நம் பலத்தை இழப்பது வேடிக்கையானது” என்று அந்த வீரர் கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close