இந்தியாவுக்கு முதன் முறையாக ஒரு தனி தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப் பயணம் செய்திருக்கும் வங்கதேச அணி, தனது வருகைக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் விளையாடி வருகிறது.
தலைநகர் டெல்லியில் நடந்த முதல் டி20 போட்டியில், இந்தியாவை சேஸிங்கில் வீழ்த்தி ரசிகர்களுக்கு ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தது.
எனினும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில், ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தால், இந்தியா வெற்றிப் பெற்று, 1-1 என்ற தொடரை சமன் செய்தது.
இந்நிலையில், நாளை (நவ.10) நாக்பூரில் நடைபெறும் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில், மல்லுக்கட்ட இவ்விரு அணிகளும் காத்திருக்கின்றன.
2016 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் அடைந்த தோல்வி, நிடாஹஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்றது என அனைத்து வலிகளுக்கும் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்க மஹ்மதுல்லா தலைமையிலான வங்கதேச அணி காத்திருக்கிறது.
அதேசமயம், ரோஹித் தலைமையிலான இந்திய அணி, எக்காரணத்தை முன்னிட்டும் கோப்பையை இழந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.
சொந்த மண்ணில் அதுவும் வங்கதேசத்திடம் இறுதிப் போட்டியில் தோற்பது என்பதை ரசிகர்கள் அவ்வளவு சாதாரணமாக கடந்து சென்றுவிட மாட்டார்கள் என்பதை இந்திய அணி நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறது.
இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றால் கூட இந்திய ரசிகர்கள் இரண்டு நாள் விமர்சித்து விட்டு மறந்துவிடுவார்கள். ஆனால், வங்கதேசம் என்பது அந்த வட்டத்திற்குள்ளேயே வராது.
இந்திய கிரிக்கெட் வீரர்களை சமூக தளங்களில் மிக மோசமாக சித்தரிப்பதாகட்டும், ஜெயித்துவிட்டால் எதிரணியை வெறுப்பேற்றும் வகையில் வங்கதேச வீரர்கள் நடந்து கொள்வதாகட்டும்... வங்கதேசம் மீது எப்போதும் நெகட்டிவ் பார்வை தான் கிரிக்கெட் விளையாடும் உலக நாடுகளின் மத்தியில் இருக்கிறது.
அதிலும், 2016 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோற்று வங்கதேசம் வெளியேறிய பிறகு, அரையிறுதியில் வெஸ்ட் இண்டீசிடம் இந்தியா தோற்றது. அதனை கொண்டாடும் விதமாக, வங்கதேச முன்னணி வீரர் முஷ்பிகுர் ரஹீம் தனது சமூக தளங்களில் பதிவிட்ட கருத்து முகம் சுளிக்க வைத்தது.
கடும் எதிர்ப்பு கிளம்பிய பிறகு, அதனை அவர் டெலிட் செய்தார்.
இப்படி, எதிரணிக்கு மதிப்பு கொடுக்காமலும், எதிரணி வீரர்களுக்கும் மதிப்பு கொடுக்காமலும் நடந்து கொள்வது என்பது வங்கதேச அணியின் வாடிக்கை என்றால் மிகையல்ல.
ஸோ, நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், எக்காரணத்தை கொண்டும் இந்தியா தோற்று விடக் கூடாது என்பதில் ரசிகர்கள் மிக உறுதியாக உள்ளனர்... அணியும் தான்.
அதேசமயம், இந்திய அணியை அதன் ரசிகர்கள் முன்னிலையில் வீழ்த்தி கோப்பையை வெல்ல, இப்படியொரு அருமையான வாய்ப்பு இனிமேல் தங்களுக்கு கிடைப்பது அரிது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் வங்கதேசம், கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பை மிஸ் செய்து விடக் கூடாது என்பதில் தீர்க்கமாக உள்ளது.