இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணியில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டி தொடர்களில் விளையாட உள்ளது. இதில் டி20 போட்டிகள் அடுத்த மாதம் நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி நிறைவடைகிறது. டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 14 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 26 ஆம் தேதி நிறைவடைகிறது.
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணியை இன்று மும்பையில் எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு அறிவித்தது.
Ind vs Ban
இந்திய டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்) ஷிகர் தவான், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்( விக்கெட் கீப்பர்) வாஷிங்டன் சுந்தர், குருணால் பாண்டியா, சஹல், ராகுல் சஹார், தீபக் சஹார், கலீல் அஹமது, ஷிவம் துபே, ஷர்துல் தாக்குர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ராஹானே, விஹாரி, சஹா (விக்கெட் கீப்பர்) ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
MSK Prasad on Dhoni - தோனி குறித்து எம்எஸ்கே பிரசாத்
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்திடம் தோனி குறித்து நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரசாத், "உலகக் கோப்பைக்குப் பிறகு எங்கள் சிந்தனை தெளிவாக இருக்கிறது. நாங்கள் ரிஷப் பந்த் மீது தான் கவனம் செலுத்துகிறோம். உலகக்கோப்பைக்குப் பிறகு நாங்கள் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதை நான் தெளிவுபடுத்தி விட்டேன். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்கள் அணியில் தங்களை நிலைநிறுத்துகிறார்களா என்பதைப் பார்க்கிறோம்.
ரிஷப் பந்த்தை எடுத்திருக்கிறோம், ஏன்...? சஞ்சு சாம்சனையும் தேர்வு செய்துள்ளோம். இப்போது நாங்கள் என்ன சிந்திக்கிறோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
தோனி உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடுவது, அல்லது ஓய்வு பெற முடிவெடுப்பது என்பது அவரது தனிப்பட்ட விஷயம். நாங்கள் ஏற்கெனவே எதிர்காலத்துக்கான வரைபடத்தை உருவாக்கியுள்ளோம். இதனை நாங்கள் செய்யும் அணித்தேர்வைக் கொண்டே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
உலகக்கோப்பைக்குப் பிறகே நாங்கள் ரிஷப் பந்த் மீதுதான் முழு கவனமும் செலுத்தி வருகிறோம். இந்த தொலைநோக்கு பார்வையுடன் தான் செயல்பட்டு வருகிறோம்" என்றார்.
சஞ்சு சாம்சன் ரிட்டர்ன்ஸ்
நான்கு வருடங்களுக்கு முன்பு 2015ல் இந்திய டி20 அணியில் விளையாடிய கேரள விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு இப்போது தான் மீண்டும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில், கோவா அணிக்கு எதிராக சஞ்சு குவித்த 212 ரன்கள் அவர் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பிரசாத், "சஞ்சுவிடம் உள்ள பிரச்சனையே நிலைத் தன்மை இல்லாதது தான். ஆனால், இப்போது அவரது ஆட்டத்தில் கன்சிஸ்டன்சி தெரிகிறது. அதனால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
நதீம் எதிர்காலம்?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3வது போட்டியில் களமிறக்கப்பட்ட நதீம், தனது தேர்வை நியாயப்படுத்தும் வகையில் பந்து வீசினார். விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். தோனி அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து, 'உனது பவுலிங்கில் முதிர்ச்சி தெரிகிறது' என்றெல்லாம் பாராட்டினார். ஆனால், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இனி அவர் அடுத்த வாய்ப்புக்காக கடவுளை பிரார்த்திக்க வேண்டியது தான்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.