Advertisment

IND vs ENG: முதல் ஒருநாள் போட்டி; 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ENG vs IND: England vs India 1st ODI Match: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றி; பும்ரா ஆட்டநாயகன்

author-image
WebDesk
New Update
IND vs ENG: முதல் ஒருநாள் போட்டி; 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

 IND VS ENG  1st ODI Score Updates: இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இந்திய அணி தற்போது இங்கிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகிறது. இன்று முதல் தொடங்கும் இத்தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் மாலை 5:30 மணிக்கு தொடங்குகிறது.

Advertisment

சொந்த மண்ணில் டி- 20 தொடரை தவறவிட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி-20-யில் அந்த அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்த அந்த அணி, கடந்த மாதத்தில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 498 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. அத்துடன் சமீபத்தில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், நிர்ணையிக்கப்பட்ட இலக்கை அதிரடியாக செயல்பட்டு விரட்டிபிடித்தது.

இங்கிலாந்து அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் மற்றும் ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இணைந்து இருப்பது அணியின் பேட்டிங் வரிசையை மேலும் பலப்படுத்தியுள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி தங்களது 'ஸ்விங்' தாக்குதல் மூலம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அணியைப் பொறுத்தவரை, தொடக்க வீரர் கே.எல் ராகுல் காயத்தில் இருந்து மீளாமல் இருந்து வருவதால் அவர் இடத்தை ஷிகர் தவான் நிரப்புவார். முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு, இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 சர்வதேசப் போட்டியின் போது இடுப்பு வலி ஏற்பட்டதால் ஓய்வு அளிக்க வாய்ப்புள்ளது. எனினும் அவர் பங்கேற்பது குறித்து காலை போட்டி தொடங்கும் முன்னர் தான் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. கோலி ஏற்கனவே தனது தற்காலிக ஃபார்ம் அவுட்டால் ரன்கள் சேர்க்க திணறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி பேட்டிங் வரிசையில் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இவர்களுடன் மூத்த வீரர் தவான் இணைவது அணிக்கு கூடுதல் வலு கிடைக்கும். பந்து வீச்சில் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹலும் நல்ல நிலையில் உள்ளனர். இவர்களுடன் இந்தியா ஒரு ஆல்ரவுண்டர்கள் கொண்ட அணியைத் தேர்வுசெய்கிறதா? அல்லது டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட் பிரசித் கிருஷ்ணாவைத் தேர்ந்தெடுப்பதா? என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

ஏற்கனவே நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி- 20 தொடரை கைப்பற்றிய அதே உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்கும். ஆனால், அதற்கு முட்டுக்கட்டை சொந்த மண்ணில் தனது ஆதிக்கத்தை செலுத்தவே இங்கிலாந்து முயலும். எனவே, இவ்விவரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.

நேருக்கு நேர்

சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை 103 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 55 ஆட்டத்திலும், இங்கிலாந்து அணி 43 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் ட்ராவில் முடிந்துள்ளன. 3 ஆட்டங்களுக்கு முடிவு எட்டப்படவில்லை.

இரு அணி வீரர்கள் பட்டியல்:

இங்கிலாந்து அணி

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், லியாம் லிவிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸ், மேத்யூ பார்கின்சன், ரீஸ் டாப்லி, கிரேக் ஓவர்டன், சாம் குர்ரன், பிலிப் சால்ட், ஹாரி புரூக்

இந்திய அணி

ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் , பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்

இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் பட்டியல்:

இந்தியா

ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ஸ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.

இங்கிலாந்து

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், லியாம் லிவிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ( கேப்டன் / விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸ், கிரேக் ஓவர்டன், ரீஸ் டாப்லி

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து திணறல்

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக, ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினர். ஜேசன் ராய் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்தில் போல்டானார். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆகினார். பும்ரா பந்தில் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து ரூட் வெளியேறினார். ஷமி பந்தில் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து ஸ்டோக்ஸ் அவுட் ஆனார்.

சிறிது நேரம் தடுமாற்றதுடன் ஆடிய பேர்ஸ்டோவ் 7 ரன்களில் வெளியேறினார். அவர் பும்ரா பந்தில் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்து பட்லர் நிதானமாக ஆடி வர, மறுமுனையில் களமிறங்கிய லிவிங்ஸ்டன் ரன் எதுவும் எடுக்காமல், பும்ரா பந்தில் போல்டானார்.

அடுத்து வந்த மொயீன் அலி பட்லருக்கு சிறிது நேரம் கம்பெனி கொடுத்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இங்கிலாந்து வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் தடுமாறினர். சிறிது நேரம் நிலைத்து ஆடிய மொயீன் அலி 14 ரன்களில் அவுட் ஆனார். அவர் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்தார்.

இங்கிலாந்து 110க்கு ஆல் அவுட்

சற்று நேரம் சிறப்பாக ஆடிய பட்லர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஷமி பந்தில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக டேவிட் வில்லியும், ஓவர்டனும் ஜோடி சேர்ந்தனர். 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷமி பந்தில் ஓவர்டன் போல்டானார். அடுத்து வந்த கார்ஸே 15 ரன்களில் பும்ரா பந்தில் போல்டானார். பின்னர் கடைசி விக்கெட்டாக இருந்த டேவிட் வில்லியையும் பும்ரா போல்டாக்கினார். வில்லி 21 ரன்கள் எடுத்தார். டோப்லே ஆட்டமிழக்காமல் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில், பும்ரா 6 விக்கெட்களையும், ஷமி 3 விக்கெட்களையும், பிரசித் கிருஷ்னா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியில் 4 பேர் டக் அவுட் ஆகியுள்ளனர். 5 பேர் போல்டாகியுள்ளனர். இதில் 4 பும்ரா எடுத்தது.

இந்தியா அபார வெற்றி

பின்னர் 111 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய, இந்திய அணி 18.4 ஓவர்களிலே விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி, இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். கேப்டன் ரோகித் சர்மா அற்புதமாக ஆடி 58 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். மறுபுறம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர், ஷிகர் தவான் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்தார். இருவரது விக்கெட்களையும் வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அற்புதமாக பந்து வீசி 6 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகன் விருது வென்றார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

India India Vs England Sports Rohit Sharma Cricket Indian Cricket Team Indian Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment