IND vs ENG 1st Test Highlights: இந்தியாவின் போராட்டம் வீண்... கடைசி நாளில் கலக்கிய இங்கிலாந்து அபார வெற்றி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs ENG LIVE Cricket Score, 1st Test Day 5

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணிக்கு லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்

முதல் நாள் ஆட்டம்: இங்கிலாந்து பவுலிங் - இந்தியா பேட்டிங் 

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல் ராகுல் ஜோடி களமிறங்கினர். அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் 8 பவுண்டரியை விரட்டி 42 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அறிமுக வீரர் சாய் சுதர்சன் டக்-அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி அமைத்தார். 

Advertisment
Advertisements

இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்ட நிலையில், இருவரும் கிடைத்த பந்துகளை அடித்து ஆடி ரன்கள் சேர்த்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், அரைசதம் கடந்து அசத்திய நிலையில், மறுபக்கத்தில் சுப்மான் கில் கேப்டனுக்கே உரிய பாணியில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார், அதே சமயம் அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் 140 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார்.

டெஸ்ட் போட்டிகளில் இது அவரின் 5-வது சதமாகும். ஆனால் அடுத்து ஒரு ரன் சேர்த்த இவர், பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய துணைக்கேப்டன் ரிஷப் பண்ட் சுப்மான் கில்லுடன் சேர்த்து ரன்கள் சேர்த்தார். குறிப்பாக ரிஷப் பண்ட் அவ்வப்போது பவுண்டரி அடித்து அசத்தினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய கேப்டன் சுப்மான் கில்,சதம் அடித்து அசத்தினர். 

இதன் மூலம் ஸெ்ட் போட்டிகளில் கில் தனது 6-வது சதத்தை பதிவு செய்தார். மேலும கேப்டனாக முதல் டெஸ்ட் போட்டியில் சதம் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து அணி மேற்கொண்ட முயற்சிக்கு கடைசிவரை பலன் கிடைக்காத நிலையில், ரிஷப் பண்ட் அரைசதம் கடந்து அசத்தினார். முதல் நாளில் 85 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.

சதம் கடந்த கில், 175 பந்துகளில் 16 பவுண்டரி ஒரு சிக்சருடன் 127 ரன்களும், அரைசதம் கடந்த பண்ட் 102 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 65 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில், ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும், கார்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

2-ம் நாள் ஆட்டம் இந்தியா பேட்டிங் 

2-வது நாள் ஆட்டத்தில், களத்தில் இருந்த கில் - பண்ட் ஜோடி தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். அவர்களது ஜோடியை உடைக்க இங்கிலாந்து பவுலர்கள் கடுமையாக போராடினர். 227 பந்துகளில் 19 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 147 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் கில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கில் - பண்ட் கிட்டத்தட்ட 200 ரன்களுக்கு மேல் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த சூழலில், அவர்களின் ஜோடி உடைக்கப்பட்டது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்

கேப்டன் கில் விக்கெட்டுக்குப் பின், களத்தில் இருந்த பண்ட்-டுடன் கருண் நாயர் ஜோடி அமைத்தார். 4 பந்தை எதிர்கொண்ட அவர் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, பண்ட் 178 பந்துகளில் 12 பவுண்டரி 6 சிக்சருடன் 134 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், ஜடேஜா 11, ஷர்துல் தாகூர் 1, பும்ரா 0, பிரஷித் கிருஷ்ணா 1 ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனது. இதனால் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. கடைசி 41 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டோக்ஸ், டங் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

இங்கிலாந்து அணி பேட்டிங்

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில், க்ரவ்லி 6 ரன்களுக்கு வெளியேறினாலும் 2-வது விக்கெட்டுக்கு இணைந்த டக்கட், ஓல்லி போப் ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல், அதே சமயம் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்த நிலையில், 26 ஓவர்களில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்த நிலையில், அணியின் ஸ்கோர் 126 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 94 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்த டங்கெட் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், போப் – டங்கெட் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் ஒருநாள் போட்டி போன்று விளையாடிய ஒல்லி போப் சதம் கடந்து அசத்தினார். அதே சமயம், ரூட் 58 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு, 209 ரன்கள் எடுத்துள்ளது.  ஒல்லி போப் 131 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 100 ரன்களுடனும், ஹேரிபுருக் ரன் கணக்கை தொடங்காமலும் களத்தில் உள்ளனர். இந்திய அணியை விட தற்போது இங்கிலாந்து அணி 262 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணி தரப்பில் விழுந்த 3 விக்கெட்டுகளையும் பும்ராவே எடுத்தனது.

3-வது நாள் ஆட்டம் 

3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஒல்லி போப் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 20, விக்கெட் கீப்பர் ஜெம்மி ஸ்மித் 40, வோக்ஸ் 38, கார்சி 22 ஆகியோர் கணிசமான பங்களிப்பை கொடுத்தனது. அதேபோல் ஒருநாள் போட்டியை போல் விளையாடிய ஹேரிபுருக் 112 பந்துகளில், 11 பவுண்டரி 2 சிக்சருடன் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இறுதியில் இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில், பும்ரா 5 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும், பிரசித் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் முதல் இன்னிங்சில் சதம் கடந்து அசத்திய தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 4 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த அறிமுக வீரர் சாய் சுதர்சன் முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன நிலையில், இந்த இன்னிங்சில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

2-வது விக்கெட்டுக்கு ராகுல் – சுதர்சன் ஜோடி 66 ரன்கள் சேர்த்த நிலையில், 48 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்து சுதர்சன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் கில் முதல்பந்தை பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கி அசத்தினார். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 47 ரன்களுடனும், கில் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில், ஸ்டோக்ஸ், கார்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

4-வது நாள் ஆட்டம் 

4-வது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சுப்மன் கில் 8 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து கே.எல்.ராகுல் - பண்ட் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் விளாசி அசத்தினர். சதமடித்த பண்ட் 118 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், களமிறங்கிய வீரர்களில் யாரும் நிலைத்து விளையாடவில்லை. கருண் நாயர் 20 ரன்களிலும், ஷர்துல் தாகூர் 4 ரன்களிலும், சிராஜ் மற்றும் பும்ரா டக் அவுட்டிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சிறப்பாக ஆடி கொண்டிருந்த கே.எல்.ராகுலும் 137 ரன்களில் ஆட்டமிழந்தார்.

96 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 364 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் மற்றும் பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை"நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 4வது நாள் முடிவில் 6 ஓவர்களில் 21 ரன்கள் அடித்துள்ளது. ஜாக் கிராலி 12 ரன்களுடனும், பென் டக்கெட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 351 ரன்கள் அடிக்க வேண்டும். இந்தியா வெற்றிபெற 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். 

5-வது நாள் ஆட்டம் 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 5-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய  ஜாக் கிராலி - பென் டக்கெட் ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் முயற்சி செய்தனர். 

அந்த வகையில், ஜாக் கிராலி 126 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஓலி போப் 8 ரன்களுடன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் 170 பந்துகளில் 21 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 149 ரன்கள் விளாசினார். இவரது விக்கெட்டை தாக்கூர் கைப்பற்றினார்.

அடுத்தபடியாக, ஹாரி புரூக் ரன்கள் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களில் வெளியேற, ஜோ ரூட் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக 82 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்களை இங்கிலாந்து குவித்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து தரப்பில் இருந்து ஜோ ரூட் 53 ரன்களுடனும், ஜேமி ஸ்மித் 44 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர். இந்திய அணியில் இருந்து ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல் 

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா. 

இங்கிலாந்து: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.

India Vs England

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: