T20 World Cup 2024 | India Vs England: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் கயானா மைதானத்தில் நடைபெறுகிறது.
கடந்த டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும், அதே வேளையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
கயானா பிட்ச் ரிப்போர்ட்
கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம் எப்போதும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில், இங்கு பேட்டர்கள் ரன்களை எடுப்பது சவாலாக இருந்துள்ளது. இந்த மைதானத்தில் சராசரி ரன் விகிதம் வெறும் 7.08 ஆகும். இது மைதானத்தின் பந்துவீச்சுக்கு ஏற்ற இயல்பைக் குறிக்கிறது.
இந்த ஆடுகளத்தில் சீம் மூமெண்ட் குறைவாக இருக்கும் என்றாலும், வேகப்பந்து வீச்சாளர்கள் டெக்கின் இரு வேக இயல்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது பந்தை பிட்ச்சிங் செய்த பிறகு பந்து சற்று நின்று வரும்.
கயானா வரலாற்று ரீதியாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு சொர்க்க பூமியாக இருந்து வருகிறது. அவர்கள் பொதுவாக ஆடுகளத்தின் மேற்பரப்பில் குறிப்பிடத்தக்க உதவியைப் பெறுகிறார்கள். எனவே, இந்த ஆட்டத்தில் இரு தரப்பிலிருந்தும் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
டிராக் மோசமடைந்து, இரண்டாவது பாதியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரிதும் உதவுவதைக் கருத்தில் கொண்டு, டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய நினைக்கும். இருப்பினும், மழை முன்னறிவிப்பை மனதில் வைத்து, மேகமூட்டமான வானத்தின் கீழ் அவர்கள் பந்துவீசி தங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை எதிரணியின் மீது கட்டவிழ்த்துவிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வுட்.
இந்த ஆட்டத்திற்கு முன்னதாக காலை 6 மணிக்கு டிரினிடாட்டில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.